
சிவகங்கை
"34 ஆண்டுகளாக சத்துணவுத் திட்டத்தில் பணியாற்றும் ஊழியர்களுக்கு வரையறுக்கப்பட்ட குறைந்தபட்ச ஊதியம் ரூ.18 ஆயிரத்தை வழங்க வேண்டும்" உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சிவகங்கை ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு சத்துணவு ஊழியர்கள் போராட்டம் நடத்தினர்.
சிவகங்கை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை சத்துணவு ஊழியர்கள் நேற்று முற்றுகையிட்டுப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்தப் போராட்டத்திற்கு தமிழ்நாடு சத்துணவு ஊழியர்கள் சங்கத்தின் மாவட்டத் தலைவர் கண்ணுச்சாமி தலைமைத் தாங்கினார். தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் மாவட்டத் தலைவர் அழகேசன் முன்னிலை வகித்தார்.
இந்தப் போராட்டத்தில், "34 ஆண்டுகளாக சத்துணவுத் திட்டத்தில் பணியாற்றும் ஊழியர்களுக்கு வரையறுக்கப்பட்ட குறைந்தபட்ச ஊதியம் ரூ.18 ஆயிரத்தை வழங்க வேண்டும்.
இதேபோன்று பணிக் கொடைக்கான தொகையை ரூ. 5 இலட்சமாக உயர்த்தி வழங்க வேண்டும்.
காலிப் பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும்" உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தப்பட்டன. மேலும், தங்களது கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் என்று முழக்கங்களையும் எழுப்பினர்.
இந்தப் போராட்டத்தில் தமிழ்நாடு அரசு சத்துணவு ஊழியர்கள் சங்கத்தின் உறுப்பினர்கள் சீமைச்சாமி, சங்கரநாராயணன், சின்னப்பன் உள்ளிட்ட ஏராளமான ஊழியர்கள் பங்கேற்று தங்களது கோரிக்கைகளுக்கு வலுசேர்த்தனர்.