
சேலம்
மத்திய அரசின் முத்தலாக் தடைச் சட்ட மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து சேலத்தில் ஏராளமான இஸ்லாமியர்கள் திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சேலம் மாவட்டம், எடப்பாடி பகுதியில் உள்ள சுன்னத் ஜமாத் அமைப்பினர் எடப்பாடி பேருந்து நிலையம் எதிரில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த போராட்டத்திற்கு சுன்னத் ஜமாத் தலைவர் பாஷா தலைமைத் தாங்கினார். போராட்டத்தில் பங்கேற்றவர்கள் "முத்தலாக் தடைச் சட்டத்தை மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும்" என்று முழக்கங்களை எழுப்பினர்.
மேலும், புதிய சட்ட மசோதாவுக்கு எதிரான தங்கள் கண்டனங்களை தீர்மானமாக நிறைவேற்றனர். அந்த தீர்மானங்களை மத்திய, மாநில அரசுகளுக்கு அனுப்ப இருப்பதாகவும் தெரிவித்தனர்.
இந்தப் போராட்டத்தில் நிர்வாகிகள் சாதிக்அலி, முஸ்தபா, பாரூக், அசோன், குட்டி (எ) சௌகத்அலி உள்ளிட்ட மற்றும் ஏராளமான இஸ்லாமியர்கள் பங்கேற்று முத்தலாக் தடை சட்டத்திற்கு எதிரான தங்களது கண்டனத்தை பதிவு செய்தனர்.