
வேலூர்
வேலூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் மருத்துவரிடம் செல்போனில் கேட்டு சிகிச்சை அளித்த செவிலியர்கள் இருவரை காவலாளர்கள் கைது செய்தனர்.
தமிழகத்தில் பல்வேறு மருத்துவமனைகளில் மருத்துவர் இல்லாமல் நர்சுகள் (செவிலியர்கள்) மற்றும் பணியாளர்கள் ஊசிபோட்டு சிகிச்சை அளித்து வருவதாக உயரதிகாரிகளுக்கு தொடர்ந்து புகார்கள் வந்த வண்ணம் உள்ளன.
இவர்கள் சிகிச்சை அளிப்பதால் நோயாளிகளுக்கு நோய் அப்போது குணமானாலும் அதனால் ஏற்படும் பக்கவிளைவுகளால் உடல்நலம் கடுமையாக பாதிக்கப்படுகிறதாம்.
இந்த நிலையில், வேலூர் மாவட்டம், காவேரிப்பாக்கத்தில் உள்ள மருத்துவர் தயாசங்கர் நடத்தி வரும் தனியார் மருத்துவமனையில் செவிலியர்களே சிகிச்சை அளிப்பதாக ஆட்சியர் ராமனுக்கு புகார்கள் வந்தன.
அதனைத் தொடர்ந்து விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க சுகாதாரத்துறை அதிகாரிகளுக்கு, ஆட்சியர் உத்தரவிட்டார்.
இதனைத் தொடர்ந்து வேலூர் மாவட்ட நலப்பணிகள் இணை இயக்குனர் யாஸ்மின் தலைமையில், மருந்துகள் ஆய்வாளர் தெய்வானை (குடியாத்தம்), காவல் உதவி ஆய்வாளர் சுவேதா ஆகியோர் நேற்று பகலில் மாறுவேடத்தில் அந்த கிளினிக்கிற்குச் சென்றனர்.
அங்கு இரண்டு பெண்கள் மட்டும் இருந்தனர். அவர்களிடம் மருந்துகள் ஆய்வாளர் தெய்வானை தனக்கு கால் வலி இருப்பதாகவும், அதற்கு சிகிச்சையளிக்க வேண்டும் என்றும் கூறினார். உடனே அங்கிருந்த இளம்பெண்கள், தெய்வானைக்கு சிகிச்சையளிக்க முயற்சி செய்துள்ளனர்.
அப்போது மருத்துவர் இல்லாமல் நீங்கள் எப்படி சிகிச்சையளிப்பீர்கள்? என்று அதிகாரிகள் கேட்டுள்ளனர். அதற்கு மருத்துவர்களிடம் செல்போனில் கேட்டு சிகிச்சையளிக்கிறோம் என்று கூறியுள்ளனர்.
இந்த சம்பவத்தை மருந்தக ஆய்வாளர் தெய்வானை தனது செல்போனில் பதிவு செய்துள்ளார். இதைப் பார்த்ததும் வந்திருப்பவர்கள் அதிகாரிகள் என்பதை அவர்கள் தெரிந்துக் கொண்டனர்.
அதனைத் தொடர்ந்து இருவரையும் பிடித்து அவர்களிடம் விசாரணையை தொடங்கினர். அதில் ஒரு பெண் காவேரிப்பாக்கத்தை சேர்ந்த அனிதா என்பதும், பி.எஸ்சி நர்சிங் படித்திருப்பதும் மற்றொரு பெண் சிறுகரும்பூர் கிராமத்தை சேர்ந்த வரலட்சுமி என்பதும் டிப்ளமோ நர்சிங் படித்திருப்பதும் தெரிய வந்தது.
மருத்துவர் இல்லாமல் செல்போனில் கேட்டு சிகிச்சை அளித்த குற்றத்திற்காக அவர்கள் மீது நலப்பணிகள் இணை இயக்குனர் யாஸ்மின் காவேரிப்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன்பேரில் அனிதா மற்றும் வரலட்சுமியை காவலாளர்கள் கைது செய்தனர்.
அந்த பெண்கள் இருவரும் கூறியதைப் போன்று செல்போனில் கேட்டு சிகிச்சை அளித்திருந்தால் இந்தக் குற்றத்திற்கு மருத்துவரும் உடந்தையாக இருப்பது உண்மையாகும் பட்சத்தில் அவர் மீதும் நடவடிக்கை எடுக்கப்படுமா?