அரசுப்பள்ளி மாணவர்களுக்கான காலை உணவு திட்டத்தை தனியாரிடம் ஒப்படைக்கும் முடிவினை தமிழ்நாடு அரசு கைவிட வேண்டும் என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கோரிக்கை விடுத்துள்ளார்.
நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழ்நாடு அரசால் தொடங்கப்பட்ட அரசுப்பள்ளி மாணவர்களுக்கான காலை உணவு திட்டத்தை தனியாரிடம் ஒப்படைப்பதற்கான தீர்மானம் சென்னை மாநகராட்சி மாமன்றக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது வன்மையான கண்டனத்துக்குரியது. பல லட்சக்கணக்கான அரசுப்பள்ளி மாணவர்களின் பசியைப் போக்கும் சத்துணவு திட்டத்தையே மெல்ல மெல்ல தனியாருக்கு தாரைவார்ப்பதற்கான முதற்படியே, தற்போது காலை உணவு திட்டத்தை தனியாரிடம் ஒப்படைக்கும் திமுக அரசின் முயற்சியாகும்.
பெருந்தலைவர் காமராசர் அவர்களால் தமிழ்நாட்டு ஏழை குழந்தைகளின் கல்விக்காக 1955 ஆம் ஆண்டு அரசுப்பள்ளிகளில் இலவச மதிய உணவுத் திட்டத்தைத் தொடங்கினார். பின்னர் 1982 ஆம் ஆண்டு சத்துணவுத் திட்டமாக விரிவாக்கம் செய்யப்பட்டு ஒவ்வொரு பள்ளியிலும் சத்துணவு மையங்கள் அமைக்கப்பட்டு சத்துணவு அமைப்பாளர், சமையலர், உதவியாளர் என்று பணியிடங்கள் உருவாக்கப்பட்டது. தற்போது தமிழ்நாடு முழுவதும் ஏறத்தாழ 1,29,000 பணியாளர்களுடன் அரசின் சமூக நலத்துறையின் கீழ் இயங்கும் 43000 சத்துணவு மையங்களில் நாள்தோறும் 55 இலட்சம் ஏழை மாணவ – மாணவியர் பயன்பெற்று வருகின்றனர்.
undefined
தமிழகத்தில் ஆளுநரும், முதல்வரும் சண்டை போடக்கூடாது; பாசமாக இருக்க வேண்டும் - தமிழிசை அறிவுரை
இந்நிலையில் அரசுப்பள்ளி மாணவர்களுக்கு காலை உணவு வழங்கும் திட்டத்தை திமுக அரசு தொடங்கியது வரவேற்கத்தக்கது, பாராட்டுக்குரியது என்றாலும், உணவு தயாரிப்பு பணிகளை தனியாரிடம் ஒப்படைப்பதென்பது எவ்வகையிலும் ஏற்புடையதல்ல. தமிழ்நாட்டின் ஒவ்வொரு பள்ளிக்கூடத்திலும், அரசு நியமித்த சத்துணவு பணியாளர்கள் பணிபுரிந்து வரும் நிலையில், பள்ளிகளில் புதிதாகத் தொடங்கப்பட்ட காலை உணவு தயாரிப்புப் பணியினை திமுக அரசு தனியாருக்கு வழங்குவது ஏன்? தனியார் நிறுவனங்களிடமிருந்து கிடைக்கும் தரகுத் தொகைக்காகவா? அல்லது சத்துணவு திட்டத்தையே மெல்ல மெல்ல தனியாருக்கு தாரைவார்ப்பதற்கான முன்னோட்டமா?
கடந்த 40 ஆண்டுகளாகப் பணியாற்றியும் சத்துணவு ஊழியர்களின் பணியானது இதுவரை நிரந்தரம் செய்யப்படவில்லை என்பதோடு, அரசு ஊழியர்களுக்கு இணையாக ஊதியம், ஓய்வூதியம், பணிக்கொடை உள்ளிட்ட உரிமைகள் எதுவும் முறையாக வழங்கப்படுவதில்லை. தங்களின் அடிப்படை உரிமைகளைக் கேட்டு பல ஆண்டுகளாக சத்துணவு ஊழியர்கள் போராடியும் இன்றுவரை அவர்களின் நியாயமான கோரிக்கைகள் நிறைவேற்றாமல் அவர்களின் உழைப்பினை உறிஞ்சும் திமுக அரசு, இன்றுவரை அவர்களை பகுதிநேர ஊழியர்களாகவே பணி செய்ய பணிப்பதென்பது கொடுங்கோன்மையாகும்.
ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன் Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.
Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D
சத்துணவு துறையில் காலியான பணியிடங்கள் நிரப்பப்படவில்லை என்பதால் 1,27,000 சத்துணவு பணியாளர்களில் தற்போது 97,000 பேர் மட்டுமே பணியாற்றுகின்ற அவலச்சூழல் நிலவுகிறது. மேலும் தமிழ்நாட்டிலுள்ள சத்துணவு மையங்களின் எண்ணிக்கையைக் குறைக்கும் வகையில் 3 கிமீ உள்ளாகச் செயல்படும் சத்துணவு மையங்களின் விவரங்களை திமுக அரசு கணக்கெடுத்து வருவதும் காலை உணவு திட்டத்தை தொடர்ந்து சத்துணவு திட்டத்தையும் தனியாரிடம் ஒப்படைக்கப்போகிறதோ என்ற சந்தேகத்தையும் ஏற்படுத்துகிறது.
விபத்தில் மூளைச்சாவடைந்த 13 வயது மாணவன்; பெற்றோரின் செயலால் கதறி அழுத அமைச்சர் காந்தி
ஆகவே, அரசுப் பள்ளிகளில் மாணவர்களுக்கான காலை உணவுத் தயாரிக்கும் பணியினை தனியாரிடம் ஒப்படைக்கும் முடிவினை தமிழ்நாடு அரசு உடனடியாக கைவிட்டு, அதனை சத்துணவு பணியாளர்களிடமே ஒப்படைத்து, அவர்களை காலமுறை ஊதிய பணியாளர்களாக மாற்றி, ஊதிய உயர்வு உள்ளிட்ட அரசு ஊழியர்களுக்கான அனைத்து அடிப்படை உரிமைகளும் வழங்க வேண்டுமென நாம் தமிழர் கட்சி சார்பாக வலியுறுத்துகிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.