
வாக்காளர்களுக்கு வழங்கப்படும் சேவைகளை மேலும் விரைவுபடுத்தவும், எளிதாக்கவும் இந்திய தேர்தல் ஆணையம் (ECI) ஒரு புதிய அமைப்பை அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் மூலம், புதிய வாக்காளர் சேர்க்கை அல்லது வாக்காளர்களின் விவரங்களில் ஏதேனும் திருத்தம் செய்யப்பட்டால், வாக்காளர் புகைப்பட அடையாள அட்டைகள் (EPICs) 15 நாட்களுக்குள் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக, வாக்காளர்கள் தங்கள் அடையாள அட்டையைப் பெற ஒரு மாதத்திற்கும் மேலாகும் நிலை இருந்தது. புதிய முயற்சியின் மூலம், விநியோக நேரம் கிட்டத்தட்ட பாதியாகக் குறைக்கப்பட்டுள்ளது.
கண்காணிக்க புதிய அமைப்பு:
இந்த மேம்படுத்தப்பட்ட விநியோக செயல்முறை, தேர்தல் ஆணையத்தால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள ஒரு நிலையான செயல்பாட்டு நடைமுறையின் (SOP) ஒரு பகுதியாகும். இது, வாக்காளர் அடையாள அட்டைகள், தேர்தல் பதிவு அலுவலரால் (ERO) உருவாக்கப்படும் தருணத்திலிருந்து, தபால் துறை (DoP) மூலம் இறுதி விநியோகம் வரை உண்மையான நேரத்தில் கண்காணிக்க உதவுகிறது.
வாக்காளர்களுக்கு ஒவ்வொரு கட்டத்திலும் எஸ்எம்எஸ் மூலம் தகவல்கள் அனுப்பப்படும் என்பதால், அவர்கள் தங்கள் அட்டையின் நிலையைக் எளிதாக அறிந்து கொள்ள முடியும்.
ECINet இணையதளம்:
இந்த புதிய அமைப்பு, இந்திய தேர்தல் ஆணையத்தால் சமீபத்தில் தொடங்கப்பட்ட ECINet என்ற டிஜிட்டல் தளத்தில் உள்ள ஒரு புதிய ஐடி தொகுதியால் இயக்கப்படுகிறது. இந்த தளம், பழைய அமைப்பை மாற்றி, முழு செயல்முறையையும் விரைவாகவும், வெளிப்படையாகவும் மாற்றும் வகையில் மறுசீரமைக்கப்பட்டுள்ளது.
தடையற்ற ஒருங்கிணைப்பை உறுதி செய்ய, இந்தியா போஸ்ட்டின் அப்ளிகேஷன் புரோகிராமிங் இன்டர்ஃபேஸ் (API) ECINet உடன் இணைக்கப்பட்டுள்ளது. இந்த நடவடிக்கை, தனிப்பட்ட தரவின் பாதுகாப்பைப் பராமரிக்கும் அதே நேரத்தில், வாக்காளர் அடையாள அட்டைகளின் தடையற்ற விநியோகத்தை அனுமதிக்கிறது.
சிறந்த வாக்காளர் சேவை:
தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் மற்றும் தேர்தல் ஆணையர்கள் டாக்டர். சுக்பீர் சிங் சந்து மற்றும் டாக்டர். விவேக் ஜோஷி ஆகியோரின் தலைமையில் கடந்த நான்கு மாதங்களில் அறிமுகப்படுத்தப்பட்ட பல சீர்திருத்தங்களில் இந்த முயற்சியும் ஒன்றாகும். இந்த சீர்திருத்தங்கள் தேர்தல் சேவைகளை மிகவும் திறமையானதாகவும், உள்ளடக்கியதாகவும், குடிமக்கள் மையப்படுத்தியதாகவும் மாற்றுவதை நோக்கமாகக் கொண்டுள்ளன.
இந்தியா முழுவதும் உள்ள அனைத்து வாக்காளர்களுக்கும் சரியான நேரத்தில் வாக்காளர் அடையாள அட்டைகளை வழங்க இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. வெளிப்படையான மற்றும் பாதுகாப்பான சேவைகளை உறுதி செய்வதன் மூலம் ஜனநாயக செயல்முறைகளை வலுப்படுத்தும் முயற்சியாகவும் அமைந்துள்ளது.