
Inactive political parties in India : தேர்தல் என்று வந்துவிட்டால் புதிய, புதிய அரசியல் கட்சிகள் உதயமாகும். அந்த வகையில் நாடு முழுவதும் பல ஆயிரம் அரசியல் கட்சிகள் உள்ளது. அதில் சில நூறு கட்சிகள் தான் உரிய முறையில் தேர்தலில் போட்டியிடவும் செய்கிறது. தேர்தல் கணக்குகளை காட்டியும் வருகிறது. அந்த வகையில் ஏற்கனவே தேர்தலில் தொடர்ந்து 6 ஆண்டுகள் போட்டியிடாத கட்சிகளின் பதிவுகளை ரத்து செய்து தேர்தல் ஆணையம் உத்தரவிட்டிருந்தது. இந்த நிலையில் தேர்தல் ஆணையம் மேலும் 474 பதிவு செய்யப்பட்ட அங்கீகரிக்கப்படாத அரசியல் கட்சிகளை பட்டியலில் இருந்து நீக்கியுள்ளது.
மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தின் படி தேர்தல் ஆணையத்தில் அரசியல் கட்சிகள் பதிவு செய்கின்றன. அவ்வாறு பதிவு செய்யப்பட்ட கட்சிகள் தொடர்ந்து 6 ஆண்டுகள் தேர்தலில் போட்டியிடாவிட்டால் அவை பதிவு செய்யப்பட்ட கட்சிகளின் பட்டியலில் இருந்து நீக்கப்படும். இதன் படி மேற்கொள்ளப்பட்ட முதல்கட்ட நடவடிக்கையின்படி 2025 ஆகஸ்ட் 9 அன்று தேர்தல் ஆணையம் 334 பதிவு செய்யப்பட்ட அங்கீகரிக்கப்படாத அரசியல் கட்சிகளை பட்டியலில் இருந்து நீக்கியது.
இதன் அடுத்தகட்டமாக செப்டம்பர் 18 அன்று மேலும் 474 பதிவு செய்யப்பட்ட அங்கீகரிக்கப்படாத அரசியல் கட்சிகளை பட்டியலில் இருந்து தேர்தல் ஆணையம் நீக்கியுள்ளது. இவற்றில் தமிழ்நாட்டைச் சேர்ந்த 42 கட்சிகள் அடங்கும். மேலும் தேர்தலில் போட்டியிட்டாலும் வருடாந்தர தணிக்கை செய்யப்பட்ட கணக்குகளை கடந்த 3 ஆண்டுகளாக (2021-22,2022-23,2023-24) உரிய காலத்திற்குள் சமர்ப்பிக்காத மற்றும் தேர்தலில் போட்டியிட்டு தேர்தல் செலவு அறிக்கைகளை தாக்கல் செய்யாத 359 பதிவு செய்யப்பட்ட அங்கீகரிக்கப்படாத அரசியல் கட்சிகள் அடையாளம் காணப்பட்டுள்ளன.
தமிழகத்தில் 39 கட்சிகளுக்கு நோட்டீஸ்
இவற்றில் தமிழ்நாட்டைச் சேர்ந்த 39 கட்சிகள் அடங்கும். இந்த கட்சிகளுக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்புமாறு மாநில தலைமைத் தேர்தல் அதிகாரி கோரப்பட்டுள்ளார். அவரது அறிக்கை அடிப்படையில் பட்டியலில் இருந்து நீக்குவதற்கான இறுதி முடிவு எடுக்கப்படும்.இதனையடுத்து தமிழக தேர்தல் இந்த 39 கட்சிகளுக்கும் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பவுள்ளார். அந்த கட்சிகள் கொடுக்கும் விளக்கத்தின் அடிப்படையில் அந்த கட்சியின் பதிவை ரத்து செய்வது தொடர்பாக தேர்தல் ஆணையம் முடிவு எடுக்கவுள்ளது.