
தமிழீழப் படுகொலைக்கான நினைவேந்தல் நிகழ்ச்சி மெரினாவில் நடத்த தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், கருப்பு சட்டை அணிந்து வரும் மே 17 இயக்கத்தினரை போலீசார் தேடி தேடி கைது செய்து வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக கருப்பு சட்டை அணிந்து வந்ததால் வட இந்தியர் ஒருவரையும் போலீசார் கைது செய்துள்ளது நகைச்சுவையை ஏற்படுத்தியுள்ளது.
மெரீனா கடற்கரையில் கண்ணகி சிலைக்கு அருகில் இன்று மாலை தமிழீழப் படுகொலைக்கான நினைவேந்தல் என்ற பெயரில் நிகழ்வு ஒன்றை நடத்த மே 17 இயக்கத்தினர் ஏற்பாடு செய்திருந்தனர்.
இதற்கு காவல்துறை தரப்பில் இருந்து அனுமதி கிடையாது என்று கூறி அறிக்கை ஒன்றை வெளியிட்டது.
அதில், மெரீனாவில் 2003 ஆண்டில் இருந்து போராட்டம் நடத்தப்படுவதில்லை எனவும், சட்ட விதிகளை மீறி போராட்டம் நடத்துபவர்கள் கைது செய்யப்படுவார்கள் எனவும் தெரிவிக்கபட்டிருந்தது.
இதையடுத்து சென்னை மெரீனா கடற்கரையில் உழைப்பாளர் சிலையில் இருந்து கண்ணகி சிலை வரையுள்ள சர்வீஸ் சாலையில் வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.
மேலும் மெரீனா கடற்கரையில் 500 க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், மே 17 இயக்கத்தினர் அறிவித்தபடி போராட்டத்தை நடத்த மேரீனாவிற்கு படையெடுத்தனர். ஆனால் போராட்டத்தில் ஈடுபடும் முன்பே போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தி கைது செய்து வருகின்றனர்.
திருவள்ளூர் சிலை அருகே மே 17 இயக்கத்தை சேர்ந்த திருமுருகன் காந்தி மெழுகுவர்த்தி ஏத்தி அஞ்சலி செலுத்தினார். பின்னர் பேரணி செல்ல முயன்றதால் போலீசார் கைது செய்தனர்.
கைது செய்யப்பட்ட அனைவரையும் பேருந்தில் ஏற்றி அடைத்து வருகின்றனர். அதன்படி கருப்பு சட்டை அணிந்து வந்ததால் வட இந்தியர் ஒருவரையும் போலீசார் கைது செய்து உள்ளனர்.
இதுகுறித்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.