
கடந்த 2009ம் ஆண்டு இலங்கையில் நடந்த போரில் ஏராளமான தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து உலகம் முழுவதும் உள்ள தமிழர்கள், இலங்கையின் அப்போதைய அதிபர் ராஜபக்சே மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினர்.
இந்நிலையில் இன்று, இலங்கையில் கொல்லப்பட்ட தமிழர்களுக்கு நினைவஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி சென்னை மெரினாவில் நடக்க இருப்பதாக அனைத்து கட்சியினர் மற்றும் பல்வேறு அமைப்பினர் அறிவித்தனர்.
ஆனால், சென்னை மாநகர காவல்துறையினர், அதற்கு தடைவிதித்தனர். பொழுது போக்கு மையமான மெரினா கடற்கரையில், கடந்த ஜனவரி மாதம் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவு தெரிவித்து லட்சக்கணக்கானோர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
அந்த ஆர்ப்பாட்டத்தை கலைப்பதற்கு போலீசார் பெரும் சிரமப்பட்டனர். இதனால், தடியடி சம்பவமும் நடந்தது. இதையொட்டி மெரினாவில் நினைவேந்தல் நிகழ்ச்சி நடத்த அனுமதி மறுக்கப்பட்டது.
இந்நிலையில், இன்று மதியம் முதல் பல்வேறு அமைப்பினர், மெரினா கடற்கரையில் நினைவஞ்சலி செலுத்த ஏராளமானோர் வந்த வண்ணம் உள்ளனர். அவர்களை, போலீசார் தடுத்து கைது செய்து வருகின்றனர்.
இதை தொடர்ந்து மெரினா கடற்கரை அமைந்துள்ள காமராஜர் சாலையில் உழைப்பாளர்கள் சிலை முதல் கண்ணகி சிலை வரை வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக சர்வீஸ் சாலையில் வாகனங்கள் செல்லு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.
இன்று ஞாயிற்றுக்கிழமை என்பதால், ஏராளமானோர் குழந்தைகள் மற்றும் குடும்பத்துடன் பொழுதை கழிக்க மெரினாவுக்கு படையெடுத்துள்ளனர்.
காலை முதல் மதியம் வரை இருந்த வெயிலை தாங்க முடியாத பலர், மாலை நேரத்தில் கடற்கரை காற்று வாங்க வந்தனர். அவர்களில் கருப்பு உடை அணிந்து வந்தவர்களை போலீசார் தடுத்து திருப்பி அனுப்புகின்றனர். சாதாரண நிற உடை அணிந்தவர்கள் கடற்கரைக்கு அனுமதிக்கப்படுகின்றனர்.
நினைவேந்தல் நிகழ்ச்சிக்கு மே 17 இயக்கத்தினர் திருமுருகன் காந்தி தலைமையிலும், தமிழக வாழ்வுரிமை கட்சியினர் வேல்முருகன் தலைமையிலும் 50க்கு மேற்பட்டோர் மெரினாவில் பேரணி நடத்தினர். அவர்களை, தடுத்து நிறுத்திய போலீசார், குண்டுக்கட்டாக கைது செய்தனர்.
இதனை கண்டித்து அவர்கள் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால், அப்பகுதியில் பரபரப்பு நிலவுகிறது.
குறிப்பாக கருப்பாக மெரினா கடற்கரைக்கு கருப்பு நிற உடையில் யார் வந்தாலும், அவர்களை தடுத்து திருப்பி அனுப்பி வைக்கின்றனர். மீறி உள்ளே நுழைவோரை கைது நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்து அனுப்பி வைக்கின்றனர்.