ஜி.எஸ்.டி முறையில் கூடுதல் வரிக்கு ஓட்டல் சங்கத்தினர் எதிர்ப்பு – மே 30ல் கடையடைப்பு...

First Published May 21, 2017, 6:15 PM IST
Highlights
hotel owners planning to strike against gst


மத்திய அரசு விதிக்க உள்ள கூடுதல் வரிக்கு எதிர்ப்பு தெரிவித்து மே 30 ஆம் தேதி கடையடைப்பு நடத்த உள்ளதாக தமிழ்நாடு ஓட்டல் சங்கத்தினர் தெரிவித்துள்ளனர்.  

ஜூலை 1-ந்தேதி முதல் மத்திய அரசு வரி சீர்திருத்தம் கொண்டு வர உள்ளது.  நேரடி, மறைமுக வரிகளுக்கு மாற்றாக, ஜி.எஸ்.டி. என்ற ஒரே வரியை அமல்படுத்த மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இது தொடர்பான மசோதா, நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் நிறைவேறி விட்டது.

அதில், ஏ.சி. அல்லாத ரெஸ்டாரண்ட்களுக்கு ஜி.எஸ்.டி.வரி 12 சதவீதம் எனவும், ஏ.சி. வசதியும், மதுபார் வசதியும் கொண்ட ரெஸ்டாரண்ட்களுக்கு 18 சதவீத வரி எனவும், 5 நட்சத்திர ஓட்டல்களுக்கு அதிகபட்சமாக 28 சதவீதம் வரி எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஓட்டல்களில் நாள் ஒன்றுக்கு அறைக்கு ரூ.1000 வரை வாடகை பெற்றால் அதற்கு வரிவிலக்கு உண்டு. அதேசமயம்,நாள் ஒன்றுக்கு அறைக்கு ரூ. ஆயிரம் முதல் ரூ.2 ஆயிரம் வரை வாடகை வசூலித்தால் 12 சதவீதம் ஜி.எஸ்.டி. வரி செலுத்த வேண்டும்.

ரூ.2500 முதல் ரூ.5 ஆயிரம் வரை 18 சதவீதம் வரி செலுத்த வேண்டும். ரூ.5 ஆயிரத்துக்கு மேல் 28 சதவீதம் வரி செலுத்த வேண்டும். 

இந்நிலையில், ஜி.எஸ்.டி முறையில் கூடுதல் வரி விதிக்க முடிவு செய்திருப்பதற்கு ஓட்டல் சங்கத்தினர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து தமிழ்நாடு ஓட்டல் சங்கத்தினர் சென்னையில் செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது அவர்கள் கூறியதாவது:

ஜி.எஸ்.டி முறையில் கூடுதல் வரி விதிக்க முடிவு செய்திருப்பது கண்டிக்கத்தக்கது.

மத்திய அரசு கூட்டியுள்ள இந்த வரியை நாங்கள் கைகளில் இருந்து செலவிட முடியாது. பொதுமக்களிடம் இருந்து தான் நாங்கள் வசூல் செய்ய வேண்டும்.

மத்திய அரசின் இந்த கூடுதல் வரியை மறு பரிசீலனை செய்ய வேண்டும். இதுகுறித்து வரும் 30 ஆம் தேதிக்குள் அரசிடம் இருந்து நல்ல முடிவு வர வேண்டும்.

இல்லையென்றால் 30 ஆம் தேதி ஒரு நாள் கடையடைப்பு நடைபெறும்.

இவ்வாறு அவர்கள் தெரிவித்துள்ளனர். 

click me!