
உச்சநீதிமன்றம் உத்தரவிட்டதையடுத்து கும்பகோணத்தில் உள்ள 23 மதுக்கடைகளும் மூடப்பட்டதால், குடிமகன்கள் திண்டாடி வருகின்றனர். அதே நேரத்தில் கோவில் நகரமாம் கும்பகோணத்தில் பொது மக்களும், பக்தர்களும் இதை கொண்டாடி வருகின்றனர்.
நெடுஞ்சாலையில் உள்ள டாஸ்மாக் கடைகளின் மூலம் ஏராளமான விபத்து ஏற்படுவதால், அந்த கடைகள் அனைத்தும் மூடப்பட வேண்டும் என பாமக தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
இதையடுத்து தேசிய நெடுஞ்சாலைகள் மற்றும் மாநில சாலைகளில் 500 மீட்டர் தூரத்திற்குள் இருக்கும் மதுக்கடைகளை மூட உச்சநீதிமன்றம் அதிரடியாக உத்தரவிட்டது.
இதையடுத்து தமிழகம் முழுவதும் 3400 கடைகள் அதிரடியாக மூடப்பட்டன. அந்த வகையில் ,கும்பகோணத்தில் மட்டும் 23 கடைகள் மூடப்பட்டுள்ளன.
கோவில் நகரம் என அழைக்கப்பட்ட கும்பகோணத்தில் உள்ள டாஸ்மாக் கடைகள் செயல்படுவதால், வெளிமாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளில் இருந்து வரும் சுற்றுப்பயணிகள் மற்றும் பக்தர்கள் தொடர்ந்து பிரச்சனைக்கு ஆளாகிவருகின்றனர்.
இந்நிலையில், அந்த ஊரில் செயல்பட்டு வந்த 23 கடைகளும் மூடப்பட்டதால், டாஸ்மாக்கே இல்லாத நகரம் என்ற சிறப்பை தற்போது பெற்றுள்ளது.