
கரூரில், ஒரே நேரத்தில் குடிநீர் கேட்டு ஆறு கிராம மக்கள் தோகைமலை ஒன்றிய அலுவலகத்தை முற்றுகையிட்டு நடத்திய போராட்டத்தால் அலுவலர்கள் என்ன செய்வதென்று தெரியாமல் திணறினர்.
கரூர் மாவட்டம் தோகைமலை ஒன்றிய பகுதிகளில் கடுமையான வறட்சி நிலவி வருகிறது. இதனால், பல்வேறு கிராமங்களில் குடிநீருக்கு பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது.
இந்த நிலையில் தோகைமலை ஊராட்சிக்கு உள்பட்ட திருப்பாத்தியூர், வெள்ளப்பட்டி கிராம பகுதி மக்கள் கடந்த இரண்டு வாரங்களுக்கும் மேலாக குடிநீர் கிடைக்காமல் அவதிப்பட்டு வருவகின்றனர். மேலும், தங்களுக்கு உடனடியாக குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரி நேற்று தோகைமலை ஒன்றிய அலுவலர்களை, அலுவலகத்தின் உள்ளே விடாமல் வெற்றுக் குடங்களுடன் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.
இதேசமயத்தில் கூடலூர் ஊராட்சியைச் சேர்ந்த செம்பாறைகல்லுப்பட்டி, தொப்பமடை மற்றும் புத்தூர் ஊராட்சியை சேர்ந்த மணியம்பட்டி, கரையாம்பட்டி ஆகிய கிராம மக்களும் குடிநீர் கேட்டு வெற்றுக் குடங்களுடன் தோகைமலை ஒன்றிய அலுவலகத்தை நேற்று முற்றுகையிட வந்திருந்தனர். அப்போது, குடிநீருக்காக மற்ற கிராமத்தினரும் போராடுவதைப் பார்த்து அவர்களுடன் இணைந்து போராட்டத்தில் இறங்கினர்.
ஆறு கிராம மக்களும் ஒன்று சேர்ந்து தோகைமலை ஒன்றிய அலுவலகத்தை முற்றுகையிட்ட தகவலறிந்த ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர் (ஊராட்சிகள்) மனோகரன், கிராம நிர்வாக அலுவலர்கள் அண்ணாதுரை, பழனிச்சாமி ஆகியோர் நிகழ்விடத்திற்குச் சென்று முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை மேற்கொண்டனர்.
இதில், ஒரு வாரத்திற்குள் திருப்பாத்தியூர், மணியம்பட்டி, தொப்பமடை, கரையாம்பட்டி, செம்பாறைகல்லுப்பட்டி, வெள்ளப்பட்டி ஆகிய ஆறு கிராமத்திற்கும் தனித்தனியாக புதிய ஆழ்குழாய் கிணறுகள் அமைத்து மக்களுக்கு குடிநீர் விநியோகம் செய்யப்படும் என்று உறுதியளித்தனர்.
இதில் சமாதானம் அடைந்த மக்கள் முற்றுகைப் போராட்டத்தைக் கைவிட்டு அங்கிருந்து கலைந்துச் சென்றனர்.
ஒரே நேரத்தில் குடிநீர் கேட்டு ஆறு கிராமத்தைச் சேர்ந்த மக்கள் போராட்டம் நடத்தியதால் அலுவலர்கள் என்ன செய்வதென்று தெரியாமல் திணறினர்.