
மறைந்த முதல்வர் ஜெ.ஜெயலலிதாவின் இறப்புக் குறித்து சி.பி.ஐ. விசாரணை நடத்த வேண்டும் என்று கோரி டெல்லி ஜந்தர் மந்தர் பகுதியில் நேற்று கேரள பெண்பூஜா நாயர் போராட்டம் நடத்தினார்.
மறைந்த முதல்வர் ஜெயலலிதா கடந்த ஆண்டு செப்டம்பர் 22-ந்தேதி அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். நன்றாக உடல் நலம் தேறி வந்தநிலையில், மாரடைப்பு காரணமாக டிசம்பர் 5-ந் தேதி மரணமடைந்தார்.
மருத்துவமனையில் சிகிச்சைபெற்ற போது, ஜெயலலிதா குறித்த புகைப்படங்கள்,வீடியோக்கள் ஏதும் வெளியாகவில்லை, முக்கிய வி.ஐ.பி.கள் யாரையும் பார்க்க விடவில்லை என்பது ஏன் எனக் கேட்டு எதிர்க்கட்சிகளும், மக்களும் தொடர்ந்து கேள்வி எழுப்பி வருகின்றனர்.
இதற்கிடையே அதிமுகவில் இருந்து பிரிந்த ஓ.பன்னீர் செல்வம் அணியைச் சேர்ந்த எம்.பி.களும் ஜெயலலிதா இறப்பு குறித்து சி.பி.ஐ. விசாரணை தேவை எனக் கோரிநாடாளுமன்றத்தில் போராட்டம் நடத்தனர்.
இந்நிலையில், கேரள மாநிலத்தைச் சேர்ந்த பூஜா நாயர் என்ற பெண் தீவிர ஜெயலலிதா ஆதரவாளர் ஆவர். அவர் நேற்று டெல்லி ஜந்தர் மந்தர் பகுதியில் ஜெயலலிதா மரணத்துக்கு சி.பி.ஐ. விசாரணை தேவை எனக் கோரி போராட்டம் செய்து பரபரப்பை ஏற்படுத்தினார்.
அப்போது அவர் கூறுகையில், “ நான் 20 வயதுகளில் இருக்கும் போது, ஜெயலலிதாவை தனிநபர் ராணுவம் என்றுதான் அழைத்தேன். அவர் இறந்தபோது அவருக்காக அமைதி ஊர்வலம் நடத்தினேன். ஜெயலலிதாவின் சாவில் இருக்கும் மர்மத்தை உடைக்க சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிட வேண்டும். பல்வேறு காரணங்களைக் கூறி சிலர் ஜெயலலிதாவின் இறப்பில் உள்ள மர்மத்தை மூடி மறைக்கிறார்கள்.
கடந்த 2014ம் ஆண்டு ஜந்தர் மந்தரில் நடந்த போராட்டத்தின் போது, நான் அதிமுக தொண்டர்களை போலீசாரின் தடியடியில் இருந்து காப்பாற்றினேன். நான் அடிவாங்கினேன். ஜெயலலிதாவின் மரணத்தின் பின்னணியில் இருக்கும் மர்மத்தை உடைக்கும் வரை போராடுவேன்’’ என்றார்.
இவரின் போராட்டம் ஜந்தர் மந்தர் பகுதியில் நேற்று பெரிய அளவுக்கு மக்களின் கவனத்தை ஈர்த்தது. ஜெயலலிதாவின் உருவப்படத்தை கையில் ஏந்தி, அப்பகுதியில் ஊர்வலமாக வந்து கோஷமிட்டு அனைவரையும் பூஜாநாயர் பார்க்க வைத்தார்.