
நாடு முழுவதும் தேசிய, மாநில நெடுஞ்சாலைகளில் மதுக்கடைகளை மூட உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த உத்தரவுக்கு சூத்திரதாரியாக இருந்தவர் சண்டிகரைச் சேர்ந்த ஹர்மான் சித்து என்பவர் எனத் தெரியவந்துள்ளது.
இவர் மதுகுடித்து வாகனம் ஓட்டியதால் ஏற்பட்ட விபத்தில் கால்கள் செயல் இழந்துள்ளார். சக்கரநாற்காலியில் மூலம் சென்று, சட்டப்போராட்டம் நடத்தி மதுக்கடைகளை மூடச் செய்துள்ளார்.
சண்டிகரைச் சேர்ந்த ஹர்மான் சித்து (46). மாநில மற்றும் தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள மதுக்கடைகள், பப்புகளை மூட உத்தரவிடும்படி முதன் முதலில் பஞ்சாப் மற்றும் ஹரியாணா உயர் நீதிமன்றத்தில் ஹர்மான் சித்துதான் வழக்கு தொடர்ந்தார்.
இவ்வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம் நெடுஞ்சாலைகளில் மது விற்பனைக்கு தடை விதித்தது. ஆனால் பஞ்சாப் மற்றும் ஹரியாணா மாநில அரசுகள் இந்த தீர்ப்பை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தன. இதைத் தொடர்ந்து இந்த விவகாரம் தொடர்பாக பல்வேறு மனுக்கள் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டன.
அத்தனை மனுக்களையும் ஒரே வழக்காக விசாரித்த உச்ச நீதிமன்றம் பஞ்சாப், ஹரியாணா உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பை உறுதி செய்து கடந்த 1-ம் தேதி தீர்ப்பளித்தது. இந்த உத்தரவு இம்மாதம் 1-ந்தேதி முதல் அமலுக்கு வந்து, நாடுமுழுவதும் தேசிய, மாநில நெடுஞ்சாலையில் 500 மீட்டருக்குள் உள்ள மதுக்கடைகள் அடைக்கப்பட்டு வருகின்றன.
இந்நிலையில் ஹர்மான் சித்துவும் ஒருகாலத்தில் மிகப்பெரிய மதுப்பிரியர், விபத்தில் தனது கால்களையும் இழந்துள்ளார் எனத் தெரியவந்துள்ளது.
இது குறித்து ஹர்மான் சித்து கூறுகையில், ‘‘நானும் மதுவை விரும்பி அருந்துபவன் தான். வீடு, ரெஸ்டாரெண்ட் மற்றும் பப்புகளில் மது அருந்துவது எனக்கு மிகவும் பிடிக்கும். ஆனால் எனது விவகாரத்தில் மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டுவது என்ற கேள்விக்கே இடமில்லை. சாலை விபத்துகளால் ஏராளமான மக்கள் உயிரிழந்து வந்தது என் மனதை வெகுவாக பாதித்தது. அதுவும் மது அருந்தி வாகனம் ஓட்டுவதால் இந்த விபத்துகள் நிகழ்ந்ததை கண்டு மனம் வெம்பினேன்.
அதன் காரணமாகவே நெடுஞ்சாலைகளில் இயங்கும் மதுக்கடைகளை மூட உத்தரவிடும்படி வழக்கு தொடர்ந்தேன். உச்ச நீதிமன்றத்தின் இந்த உத்தராவல் இனி சாலையில் விபத்துகள் நிகழ்வது நிச்சயம் குறையும். விபத்தில் இரு கால்களும் செயல் இழந்துபோனாலும், சக்கர நாற்காலியில் அமர்ந்து கொண்டே சட்டப்போராட்டம் நடத்தி இருக்கிறேன்’’ என்று தெரிவித்தார்.