
ஆர்கே நகர் இடைத் தேர்தல் வரும் 12ம் தேதி நடைபெற உள்ளது. இதையொட்டி அனைத்து கட்சியினரும் தீவிர பிரச்சாரம் செய்து வருகின்றனர்.
தேர்தலில் பணம் பட்டுவாடா செய்வது, பரிசு பொருட்கள் தருவது உள்பட பல்வேறு புகார்கள் தேர்தல் ஆணையத்தில் பல்வேறு கட்சியினர் புகார் அளித்தனர். மேலும், தேர்தல் நியாயமாகவும், நேர்மையாகவும் நடத்த வேண்டும். சில அதிகாரிகளை மாற்ற வேண்டும் என கோரிக்கை எழுந்தது.
இதைதொடர்ந்து சென்னை மாநகர கமிஷனர் ஜார்ஜ், தேர்தல் அதிகாரி பத்மஜா தேவி ஆகியோர் மாற்றம் செய்யப்பட்டனர். ஆனாலும், தேர்தலில் நடக்கும் உள்ளடி வேலைகள் குறையவில்லை. பணம் பட்டுவாடா செய்வோரை பிடித்து கொடுத்தாலும், அதிகாரிகள் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என புகார் எழுந்தது.
இந்நிலையில் ஆர்கே நகர் தொகுதிக்கு உட்பட்ட திருவொற்றியூர் குமார், வண்ணாரப்பேட்டை அன்ந்தகுமார், ராயபுரம் ஸ்டீபன் ஆகிய காவல் நிலைய உதவி கமிஷனர்களையும், டிஜியி ராஜேந்திரன் பணியிட மாற்றம் செய்து உத்தரவிட்டனர்.
மேற்கண்ட 3 உதவி கமிஷனர்களும் காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்படுகிறார்கள். இதை தொடர்ந்து மேற்கண்ட 3 பகுதிகளுக்கும் புதிய உதவி கமிஷனர்கள் விரைவில் நியமிக்கப்படுவார்கள் என டி.ஜி.பி. ராஜேந்திரன் அறிவித்துள்ளார்.