
கரூரில், தேசிய வங்கிகளில் விவசாயிகள் பெற்ற கடன்களை உடனடியாக தள்ளுபடி செய்ய வேண்டும் உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி விவசாயிகள் மற்றும் பல்வேறு கட்சியினர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்.
“தேசிய வங்கிகளில் விவசாயிகள் பெற்ற கடன்களை உடனடியாக தள்ளுபடி செய்ய வேண்டும்.
டெல்லியில் போராடும் விவசாயிகளின் கோரிக்கைகளை மத்திய, மாநில அரசுகள் உடனே நிறைவேற்ற வேண்டும்.
காவிரி ஆற்றில் மணல் அள்ளுவதை நிறுத்த வேண்டும்
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கவேண்டும்.
தென்னிந்திய நதிகளை இணைக்க மத்திய, மாநில அரசுகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.
வறட்சியால் காய்ந்துபோன நெற்பயிர்களுக்கு காப்பீட்டுத் தொகையை உடனடியாக வழங்க வேண்டும்” போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தியும், விவசாயிகளை வஞ்சிக்கும் போக்கைக் கடைப்பிடிக்கும் மத்திய, மாநில அரசுகளைக் கண்டித்தும் மாயனூர் காவிரி தென்கரை பாசன விவசாயிகள் நேற்று உண்ணாவிரத போராட்டம் மேற்கொண்டனர்.
குளித்தலை காந்திசிலை அருகே நடைபெற்ற இந்த உண்ணாவிரத போராட்டம் நடைப்பெற்றது. இதற்கு மாயனூர் காவிரி தென்கரை பாசன விவசாயிகளின் ஒருங்கிணைப்பாளர் மருதூர் சம்பத் தலைமை வகித்தார். முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும், தி.மு.க. நகர செயலாளருமான மாணிக்கம் முன்னிலை வகித்தார்.
மாயனூர் காவிரி தென்கரை பாசன விவசாயிகள் நடத்திய இந்த் உண்ணாவிரதப் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து தி.மு.க., காங்கிரஸ், கம்யூனிஸ்டு, தமிழ் மாநில காங்கிரஸ் உள்பட பல்வேறு கட்சியின் முக்கிய பொறுப்பாளர்கள் மற்றும் மாயனூர் காவிரி தென்கரை பாசன விவசாயிகள் உள்பட பலர் பங்கேற்றனர்.