இனி சென்னையில் வெள்ள பாதிப்பு வராது! தமிழக பட்ஜெட்டில் சூப்பர் அறிவிப்பு!

Published : Mar 14, 2025, 11:23 AM ISTUpdated : Mar 14, 2025, 11:39 AM IST
இனி சென்னையில் வெள்ள பாதிப்பு வராது! தமிழக பட்ஜெட்டில் சூப்பர் அறிவிப்பு!

சுருக்கம்

Tamil Nadu Budget 2025-26: தமிழக சட்டப்பேரவையில் 2025-26ம் ஆண்டுக்கான பட்ஜெட்டை நிதியமைச்சர் தங்கம் தென்னரசு தாக்கல் செய்தார். இதில் சென்னை போக்குவரத்து நெரிசலை குறைக்க மேம்பாலங்கள், திடக்கழிவு மேலாண்மை திட்டங்கள், அடையாறு நதி சீரமைப்பு, மழைநீர் உறிஞ்சும் பூங்காக்கள் உள்ளிட்ட முக்கிய அறிவிப்புகள் இடம்பெற்றுள்ளன.

தமிழக சட்டப்பேரவையின் இந்த ஆண்டுக்கான முதல் கூட்டம் கடந்த ஜனவரி மாதம் 6ம் தேதி கூடியது. அன்றைய தினம் ஆளுநர் ஆர்.என்.ரவி உரையுடன் தொடங்கிய கூட்டம், தொடர்ந்து 4 நாட்கள் நடைபெற்று முடிந்தது. இதையடுத்து சட்டப்பேரவையின் அடுத்த கூட்டத்தொடர் மார்ச் 14ம் தேதி நடைபெறும் என்றும், அப்போது, தமிழக அரசின் 2025-2026ம் ஆண்டுக்கான பட்ஜெட்டை நிதித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு தாக்கல் செய்வார் என்றும் சபாநாயகர் அப்பாவு கடந்த மாதம் அறிவித்தார்.

அதன்படி, தமிழக சட்டப்பேரவை கூட்டம் இன்று காலை 9.30 மணிக்கு பட்ஜெட்டை நிதியமைச்சர் தங்கம் தென்னரசு தாக்கல் செய்தார். அப்போது பேசிய அவர்: சென்னை மாநகரத்தில் வாகனப் போக்குவரத்து பன்மடங்காக அதிகரித்துள்ளதால் ஏற்படும் கடும் போக்குவரத்து நெரிசலைத் தவிர்ப்பதற்காக பல திட்டங்கள் நிறைவேற்றப்பட்டு வருகின்றன. அதன் ஒரு பகுதியாக வேளச்சேரி, கிண்டி உள்ளிட்ட பகுதிகளில் வசிக்கும் சுமார் 7 இலட்சம் மக்கள் பயன்பெறும் வகையில், வேளச்சேரி பிரதான சாலையிலிருந்து குருநானக் கல்லூரி சந்திப்பு வரை 3 கி.மீ. நீளத்திற்கு ஒரு மேம்பாலம் 310 கோடி ரூபாய் மதிப்பீட்டிலும், அதேபோன்று இரயில்வே துறையுடன் இணைந்து கொருக்குப்பேட்டை ரயில்வே  மேம்பாலம், சுமார் ஒரு இலட்சத்திற்கம் மேற்பட்ட அப்பகுதி மக்கள் பயன்பெறும் வகையில் 70 கோடி ரூபாய் மதிப்பீட்டில் பெருநகர சென்னை மாநகராட்சி சார்பில் அமைக்கப்படும். 

சென்னை பெருநகர மாநகராட்சியின் ஒருங்கிணைந்த திடக்கழிவு மேலாண்மைத் திட்டத்தின் கீழ், கொடுங்கையூர் குப்பை கொட்டும் வளாகத்தில் உயிரி எரிவாயு  நிலையம், இயற்கை உரம் தயாரிக்கும் நிலையம், தானியங்கி பொருள் மீட்பு மையம் (Automatic Material Recovery Facility) மற்றும் 21 மெகாவாட் திறன் கொண்ட திடக் கழிவிலிருந்து மின்சாரம் தயாரிக்கும் பணி 3,450 கோடி ரூபாய் திட்டக் காலத்திற்கான மதிப்பீட்டில் தொடங்கப்படும். இதைப் போன்று, திறன்மிக்க திடக்கழிவு மேலாண்மை மற்றும் மின்சார உற்பத்தி செய்யும் பொருட்டு, சென்னை மற்றும் தாம்பரம் மாநகராட்சிகளுக்கு அருகிலுள்ள நகராட்சிகள் மற்றும் பேரூராட்சிகளுக்குப் பயன்படும் வகையில், திடக்கழிவிலிருந்து மின்சாரம் தயாரிக்கும் ஆலை தாம்பரம் மாநகராட்சிப் பகுதியில் நிறுவப்படும். இத்திட்டத்தின் கீழ் 1500 டன் மறுசுழற்சி செய்ய இயலாத திடக்கழிவின் செயலாக்கம் மூலம் தினந்தோறும் 15 முதல் 18 மெகாவாட் மின்சாரம் தயாரிக்க இயலும். 

நகர்ப்புரங்களில் வசிக்கும் மக்களுக்குத் தூய்மையான மற்றும் பசுமையான வாழிடச் சூழலை உருவாக்கும் பொருட்டு, அடையாறு நதியை மீட்டெடுத்து அழகுறச் சீரமைக்கும் திட்டம் 1,500 கோடி ரூபாய் மதிப்பீட்டில் தனியார் பங்களிப்புடன் தொடங்கப்பட்டுள்ளது. முப்பது மாத காலத்திற்குள் பணி நிறைவடையக் கூடிய இத்திட்டத்தின் முதற்கட்டமாக, சைதாப்பேட்டை முதல் திரு.வி.க.பாலம் வரையிலான பணிகளுக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டு 15 மாதங்களுக்குள் இப்பணிகள் முடிக்கப்படும். பருவநிலை மாற்றத்திலிருந்து மீட்கும் தன்மையுடைய ஏழு மழைநீர் உறிஞ்சும் பல்லுயிர்ப் பூங்காக்கள் (Sponge Park) சென்னை பெருநகரப் பகுதியில் 88 கோடி ரூபாய் மதிப்பீட்டில் உருவாக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

ஒவ்வொரு பருவமழை காலங்களிலும் சென்னையில் வெள்ளம் வருவது பெரும் பிரச்சனையாக உருவெடுத்திருக்கிறது. இதனை தவிர்க்க  7 மழைநீர் உறுஞ்சும் பூங்காக்கள் அமைக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

23 மாவட்டங்களில் இன்று அடிச்சு ஊத்தப்போகும் கனமழை.. எங்கெல்லாம் தெரியுமா?
Tamil News Live Today 11 January 2026: அங்காரக யோகம் 2026 - கும்ப ராசியில் அக்னி கிரகங்களின் ருத்ர தாண்டவம்.! நிலைகுலையப் போகும் 5 ராசிகள்.! பொருளாதார வீழ்ச்சியை சந்திக்கப் போறீங்க.!