பாஸ்போர்ட் விண்ணப்பிக்க கணவரின் கையொப்பம் தேவையில்லை: உயர் நீதிமன்றம்

Published : Jun 21, 2025, 02:18 PM IST
Arvind Kejriwal passport renewal issue

சுருக்கம்

திருமணமான பெண்கள் பாஸ்போர்ட் விண்ணப்பிக்க கணவரின் கையொப்பம் தேவையில்லை என்று சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. விவாகரத்து வழக்கு நிலுவையில் இருந்தபோது, பாஸ்போர்ட் விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டதால், பாதிக்கப்பட்ட பெண் நீதிமன்றத்தை அணுகினார்.

திருமணமான பெண்கள் பாஸ்போர்ட் விண்ணப்பிக்க கணவரின் கையொப்பம் தேவையில்லை என்று சென்னை உயர்நீதிமன்றம் இன்று அதிரடி தீர்ப்பு வழங்கியுள்ளது. இந்த தீர்ப்பு, பாஸ்போர்ட் விதிகள் தொடர்பாக திருமணமான பெண்களுக்கு இருந்த ஒரு முக்கியமான தடையை நீக்கியுள்ளது.

சென்னையைச் சேர்ந்த இளம்பெண் ரேவதிக்கு கடந்த 2023 ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. பின்னர், குடும்பப் பிரச்சினை காரணமாக கணவன், மனைவி இருவரும் விவாகரத்து கோரி நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தனர். இந்த விவாகரத்து வழக்கு நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.

பாஸ்போர்ட் விண்ணப்பம்

இதற்கிடையே, ரேவதி கடந்த ஏப்ரல் மாதம் பாஸ்போர்ட் கோரி விண்ணப்பித்திருந்தார். ஆனால், அவரது பாஸ்போர்ட் விண்ணப்பம் தொடர்பாக எந்தத் தகவலும் பாஸ்போர்ட் அலுவலகத்தில் இருந்து அவருக்குக் கிடைக்கவில்லை. இதனால் அவர் பாஸ்போர்ட் அலுவலகத்திற்குச் சென்று தனது விண்ணப்பத்தின் நிலை குறித்து விசாரித்துள்ளார்.

அப்போது, திருமணமான பெண்கள் பாஸ்போர்ட் விண்ணப்பத்தில், அவர்களின் கணவரிடமிருந்து கையொப்பம் வாங்க வேண்டும் என்று 'படிவம் ஜே' (Form-J) -வில் குறிப்பிடப்பட்டுள்ளது என்றும், ரேவதியின் பாஸ்போர்ட் விண்ணப்பத்தில் அவரது கணவரின் கையொப்பம் இல்லாததால் அவரது விண்ணப்பம் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது என்றும் பாஸ்போர்ட் அலுவலக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு

இந்நிலையில், பாஸ்போர்ட் விண்ணப்பிக்க கணவரின் கையொப்பம் தேவை என்ற விதியை எதிர்த்து ரேவதி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த மனு நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் அமர்வு முன் இன்று விசாரணைக்கு வந்தது.

வழக்கை விசாரித்த நீதிபதி, "பெண்கள் பாஸ்போர்ட் விண்ணப்பிக்க கணவரின் அனுமதி கையொப்பம் தேவையில்லை" என்று தீர்ப்பளித்தார். இந்தத் தீர்ப்பு, திருமணமான பெண்களுக்கு பாஸ்போர்ட் பெறுவதில் ஒரு முக்கிய தடையாக இருந்த விதியை நீக்கி, அவர்களுக்கு மேலும் சுதந்திரத்தை அளித்துள்ளது.

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

முக்தார் மீது நடவடிக்கை வேண்டும்.. டெல்லி சென்ற கரு.நாகராஜன்.. ஜி.கே.வாசனிடம் கடிதம்!
மகளிர் உரிமைத் தொகை உயருகிறது..! எவ்வளவு தெரியுமா? முதல்வர் சொன்ன குட்நியூஸ்!