
இராமநாதபுரம்
முதுகுளத்தூர் அரசு மருத்துவமனையில் போதுமான படுக்கை வசதிகள் இல்லை என்றும், மருத்துவர்கள் பணியில் இருப்பதில்லை என்றும் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு மருத்துவமனை சென்றுள்ள நோயாளிகள் புகார் தெரிவித்துள்ளனர்.
இராமநாதபுரம் மாவட்டம், முதுகுளத்தூர், காக்கூர், கிழக்குத் தெரு, வெண்ணீர்வாய்க்கால் ஆகிய கிராமங்களிலிருந்து ஏராளமானோர் மர்ம காய்ச்சலால் பாதிக்கப்பட்டு முதுகுளத்தூர் அரசு மருத்துவமனைக்குச் சிகிச்சைப் பெற செல்கின்றனர்.
முதுகுளத்தூர் அரசு மருத்துவமனையில் கிராம, நகர்புறங்களை சேர்ந்தவர்கள் நாள்தோறும் 400-க்கும் அதிகமான நோயாளிகள் தங்கியும், வெளி நோயாளிகளாக சிகிச்சை பெற்றும் செல்கின்றனர்.
ஆனால், இங்கு, 75 நோயாளிகளுக்கு மட்டுமே படுக்கை வசதி உள்ளது. இதனால், 100-க்கும் மேற்பட்ட நோயாளிகள் தரையில் படுத்துச் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.
வெளிநோயாளிகள் பிரிவில் நோயாளிகளுக்கென அமைக்கப்பட்டுள்ள கழிப்பறையில் போதிய தண்ணீர் வசதியில்லாததால் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது.
மேலும், இந்த மருத்துவமனையில் குடிநீர் சுகாதாரமானதாக இல்லை என்றும் மருத்துவர்கள் பணியில் இல்லாமல் அவ்வப்போது வந்து செல்கின்றனர் என்றும் நோயாளிகள் குற்றம் சாட்டுகின்றனர்.
அரசு மருத்துவமனையில் ஜெனரேட்டருக்கு டீசல் மானியம் ஒதுக்கீடு செய்யப்படாமலும், சுத்திகரிக்கப்பட்ட தண்ணீர் எந்திரம் பழுதால் நோயாளிகள் குடிநீரின்றியும், இரவு நேரங்களில் மின்தடை காலங்களில் ஜெனரேட்டர் இயக்கப்படாமல் இருளிலும், கொசுக்கடியிலும் தவித்து வருகின்றோம் என்று நோயாளிகளே புகார் தெரிவித்தும் வண்ணம் முதுளத்தூர் அரசு மருத்துவமனை உள்ளது.