
இராமநாதபுரம்
அபிராமம் பகுதியில் ஆறு மாதங்களுக்கு முன்பு அகற்றப்பட்ட இரகசிய கண்காணிப்பு கேமராக்களை மீண்டும் நிறுவ வேண்டும் என்று மக்கள் வலியுறுத்தி உள்ளனர்.
இராமநாதபுரம் மாவட்டத்திலுள்ள 46 காவல் நிலையங்களின் கட்டுப்பாட்டில் இருக்கும் கோயில்கள், பேருந்து நிலையங்கள், மக்கள் கூடும் இடங்கள் போன்ற முக்கியப் பகுதிகளில் ஓரு வருடத்திற்கு முன்பு இரகசிய கண்காணிப்புக் கேமராக்கள் பொருத்தப்பட்டன.
இந்த நிலையில், அபிராமத்தில் ஆறு மாதங்களுக்கு முன்பு சாலை விரிவாக்கத்திற்காக தாற்காலிகமாக அகற்றப்பட்ட அந்தக் கேமராக்கள் இதுவரை மீண்டும் பொருத்தப்படாமல் உள்ளது என்று அப்பகுதி மக்கள் புகார் தெரிவித்த வண்ணம் உள்ளனர்.
சமீபகாலமாக அபிராமம் பகுதியில் பரளையாறு மற்றும் கண்மாய், ஊருணிகள், வரத்துக் கால்வாய்கள், தனியார் நிலங்களில் மணல் கடத்தப்படுவது அதிகரித்துள்ளது.
மணல் கடத்தப்படும் லாரிகள், டிராக்டர்கள் அபிராமத்திலுள்ள பேருந்து நிலையம், பேரூராட்சி அலுவலகம் செல்லும் நுழைவு வாயில் வழியாகத்தான் செல்ல வேண்டும்.
அபிராமம் பகுதியில் சாலை அகலப்படுத்தும்போது அகற்றப்பட்ட இரகசிய கேமராக்களுடன் கூடிய இரும்புத் தூண்கள், காவல் நிலையங்களில் வைக்கப்பட்டு உள்ளன. இதனால், மணல் கடத்தும் லாரிகளை கண்காணிப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. அதனுடன், குற்றச் செயல்களை கண்டறிவதிலும் தொய்வு ஏற்பட்டுள்ளது.
எனவே, காவல்துறை, இரகசிய கண்காணிப்புக் கேமராக்களை மீண்டும் நிறுவ முன்வர வேண்டும் என்று மக்கள் வலியுறுத்துகின்றனர்.