பெங்களூர் ராமேஸ்வரம் கஃபே குண்டு வெடிப்பு.! சென்னை, ராமநாதபுரத்தில் திடீர் ரெய்டில் இறங்கிய என்ஐஏ

By Ajmal KhanFirst Published Mar 5, 2024, 8:08 AM IST
Highlights

பெங்களூரில் உள்ள பிரபல ஓட்டலான ராமேஸ்வரம் கஃபேயில் கடந்த சில தினங்களுக்கு முன்பு குண்டு வெடித்தது. இந்த குண்டு வெடித்ததில் யாருக்கு தொடர்பு என எந்த தகவலும் கிடைக்காத நிலையில், சென்னை மற்றும் ராமாநாதபுரத்தில் என்ஐஏ போலீசார் திடீர் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.
 

பெங்களூர் குண்டு வெடிப்பு

நாடாளுமன்ற தேர்தல் தேதி இன்னும் ஒரு வாரத்தில் அறிவிக்கப்படவுள்ள நிலையில்,  பெங்களூரில் குண்டு வெடிப்பு நடைபெற்றது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடக மாநிலம் பெங்களூருவில் உள்ள ஒயிட் ஃபீல்டில் ஏராளமான தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் இயங்கி வருகின்றன.

இங்குள்ள 'ராமேஸ்வரம் கஃபே' உணவகம் பிரபலமானது. இங்கு கடந்த 1ஆம் தேதி மதியம் பயங்கர சத்தத்துடன் குண்டு வெடித்தது. இந்த குண்டு வெடிப்பில் 10 பேர் காயம் அடைந்தனர். குண்டு வெடிப்புக்கு யாரும் இதுவரை பொறுப்பேற்கவில்லை. இதனையடுத்து குற்றவாளியை கண்டுபிடிக்க தொடர் விசாரணை நடைபெற்று வருகிறது. மேலும் இந்த வழக்கு தேசிய புலனாய்வு அமைப்புக்கு மாற்றம் செய்யப்பட்டது.

தமிழகத்தில் என்ஐஏ சோதனை

ராமேஸ்வரம் கஃபே ஹோட்டலுக்கு சென்ற என்.ஐ.ஏ. அதிகாரிகள், மத்திய உளவுப் பிரிவு அதிகாரிகள் அங்கு சோதனையும் ஆய்வும் மேற்கொண்டனர். மேலும் 2022-ம் ஆண்டு மங்களூரில் நடந்த குக்கர் குண்டு வெடிப்புக்கும் பெங்களூர் ராமேஸ்வரம் கஃபே குண்டு வெடிப்புக்கும் தொடர்பு இருக்கலாம் என்ற கோணத்திலும் விசாரணை மேற்கொள்ளப்பட்டது. இதனிடையே குண்டு வைத்த தீவிரவாதி தமிழகம், கேரளா, ஆந்திரா உள்ளிட்ட இடங்களுக்கு தப்பி சென்று இருக்கலாம் என்ற கோணத்திலும் விசாரணை மற்றும் சோதனை நடைபெறுகிறது.

இந்தநிலையில் தமிழகத்தில் 4 இடங்களில் என்ஐஏ போலீசார் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். சென்னை மண்ணடி மற்றும் ராமநாதபுரத்தில் இந்த சோதனையானது நடைபெற்று வருகிறது. பெங்களூர் குண்டு வெடிப்பு தொடர்பாக தமிழகத்தில் என்ஐஏ போலீசார் களம் இறங்கியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

இதையும் படியுங்கள்

ராமேஸ்வரம் கஃபே குண்டுவெடிப்பு வழக்கு: தேசிய புலனாய்வு அமைப்பிடம் ஒப்படைப்பு!

click me!