உக்கடம் கார் வெடிப்பு வழக்கு தொடர்பாக தமிழகம் முழுவதும் மொத்தம் 30 இடங்களில் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகிறார்கள்.
தமிழகம் முழுவதும் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் இன்று (சனிக்கிழமை) காலை முதல் தீவிர சோதனை மேற்கொண்டு வருகிறார்கள். சென்னை, கோவை, தென்காசி மாவட்டங்கள் உள்பட மொத்தம் 30 இடங்களில் இந்தச் சோதனை நடைபெற்று வருகிறது.
சென்னையில் மூன்று இடங்களில் என்.ஐ.ஏ. சோதனை நடைபெறுகிறது. திரு.வி.க. நகரில் முர் ரகுமான் என்பவரது வீட்டிலும், நீலாங்கரையில் புகாரி என்பவரின் வீட்டிலும் சோதனை நடத்தப்படுகிறது.
கோவையில் உக்கடம், போத்தனூர், கரும்புக்கடை, ஜி.எம். நகர் உள்ளிட்ட 20 இடங்களில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் தீவிர சோதனையில் ஈடுபட்டுள்ளனர். கோவை 86வது வார்டு திமுக இளைஞர் அணி துணை அமைப்பாளர் தமிமூன் அன்சாரி வீட்டிலும், 83 வார்டு திமுக கவுன்சிலர் முபஷீரா வீட்டிலும் என்.ஐ.ஏ அதிகாரிகள் சோதனையிடுகிறார்கள்.
தென்காசியில் கடையநல்லூரில் உள்ள முகமது இத்ரிஸ் என்பவரது வீட்டிலும் விசாரணை நடக்கிறது. சாதாரண கூலித் தொழிலாளியான இவர் பல பகுதிகளுக்கு பயணங்கள் மேற்கொண்டிருப்பதாகக் கூறப்படுகிறது. இவரது பயண நோக்கம் தொடர்பாக சந்தேகத்தின் பேரில் விசாரணை நடத்தப்பட்டு வருவதாகச் சொல்லப்படுகிறது.
உக்கடம் குக்கர் வெடிப்பு சம்பவம் தொடர்பாக தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் விசாரணை நடத்திவருகிறார்கள் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. குறிப்பாக, கோவை அரபிக்கல்லூரியில் பயங்கரவாத செயலுக்கு பயிற்சி அளிக்கப்படுவதாக தகவல் கிடைத்ததை அடுத்து, அந்தக் கல்லூரியில் படித்தவர்கள் மற்றும் தொடர்புடையவர்கள் வீடுகளில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.
30 நாட்கள் அவகாசம்... மீறினால் தினமும் ரூ.5,000 அபராதம்... வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி உத்தரவு!
2022ஆம் ஆண்டு அக்டோபர் 23ஆம் தேதி கோவை உக்கடம் அருகே, அதிகாலையில் கோட்டைமேட்டில் இருந்து டவுன்ஹால் நோக்கிச் சென்றுகொண்டிருந்த கார் திடீரென வெடித்து தீப்பிடித்தது. விபத்துக்குள்ளான கார் இரண்டு துண்டாக உடைந்தது. காரை ஓட்டிவந்த உக்கடம் ஜி.எம்.நகரைச் சேர்ந்த ஜமேஷா முபின் உயிரிழந்தார். காரில் சமையலுக்கு பயன்படுத்தப்படும் 2 சிலிண்டர்கள் இருந்ததும், அதில் ஒரு சிலிண்டர் வெடித்துச் சிதறியதால் காரில் தீ பற்றியதும் தெரியவந்தது.
இதுகுறித்து போலீசார் நடத்திய விசாரணையில் உயிரிழந்த ஜமேஷா முபின் வீட்டில் இருந்து வெடிபொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இந்த சம்பவத்தில் தொடர்புடைய முகமது அசாருதீன், அப்சர்கான், முகமது தல்கா, முகமது ரியாஸ், பெரோஸ் இஸ்மாயில், முகமது நவாஸ் இஸ்மாயில் ஆகிய 6 பேரும் போலீசாரால் கைது செய்யப்பட்டனர்.
பின்னர் இந்த வழக்கு என்.ஐ.ஏ.க்கு மாற்றப்பட்டது. என்.ஐ.ஏ. விசாரணையில் இந்த வழக்கு தொடர்பாக முகமது தவ்பிக், குன்னூரை சேர்ந்த உமர்பாருக், பெரோஸ்கான், ஷேக் இதயத்துல்லா, சனாபர் அலி ஆகியோர் கைது செய்யப்பட்டனர். கடந்த ஆகஸ்ட் மாதம் கோவை ஜி.எம். நகரில் இத்ரிஸ் என்பவர் கைது செய்யப்பட்டார். பின்னர், செப்டம்பர் மாதம் 1ஆம் தேதி கேரள சிறையில் இருந்துகொண்டே சதித்திட்டங்களை இயக்கிக்கொண்டிருந்த அசாருதீன் என்பவர் கைது செய்யப்பட்டார்.
ஐபோன் 15 ரிலீஸ் ஆனதும் பழைய மாடல்களின் விலையைக் குறைத்த ஆப்பிள் நிறுவனம்!