சென்னையில் பள்ளிக்கரணை, படப்பை, பெரும்பாக்கம் பகுதிகளில் என்ஐஏ அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டுள்ளதால் பதற்றம் ஏற்பட்டுள்ளது.
சமூக விரோத செயல்களில் ஈடுபடுபவர்களை தேசிய முகமை கண்காணித்து வருகிறது. அந்த வகையில் தமிழகத்தில் கடந்த சில மாதங்களாகவே சோதனை நடத்தி தகவல்களை சேகரித்துவருகின்றனர். குறிப்பாக கோவையில் கடந்த ஆண்டு அக்டோபர் 23 ஆம் தேதி உக்கடத்தில் உள்ள கோட்டை சங்கமேஸ்வரர் கோயிலின் முன் கார் குண்டு வெடிப்பு நிகழ்ந்தது. இதில் ஜமேசா முபின் என்பவர் உயிரிழந்தார். இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து அவரது நண்பர்கள், உறவினர்களின் வீடுகள் என தொடர் சோதனை நடத்தப்பட்டு வருகிறது.மேலும் வேறு ஏதேனும் அசம்பாவித சம்பவங்களுக்கு திட்டமிட்டுள்ளனர்களா எனவும் விசாரித்து வருகின்றனர்.
இதே போல விடுதலை புலிகள் அமைப்பிற்கு ஆதரவாக செயல்படுபவர்கள், காலிஸ்தான் ஆதரவாளர்களை குறிவைத்து சோதனை நடத்தப்படுகிறது. இந்தநிலையில் இன்று அதிகாலை முதல் சென்னையில் என்ஐஏ அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட வழக்கின் அடிப்படையில் தடை செய்யப்பட்ட அமைப்புகளுடன் தொடர்பில் இருக்கக் கூடிய நபர்களின் இல்லங்களில் சோதனை நடத்தப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது. சென்னையை அடுத்த பள்ளிக்கரணை, படப்பை, பெரும்பாக்கம் ஆகிய இடங்களில் தேசிய புலனாய்வு அமைப்பு (NIA) அதிகாரிகள் சோதனை நடத்தி வருகிறார்கள். இந்த சோதனைக்கு பிறகே சோதனைக்கான காரணத்தை வெளியிடப்படும் என என்ஐஏ அதிகாரிகள் கூறியுள்ளனர்.