
Flood rescue vehicles in India : தமிழகத்தில் வட கிழக்கு பருவமழை தொடங்கவுள்ளது. இதனையடுத்து பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தமிழக அரசு மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில் வெள்ள பாதிப்பின் போது தண்ணீரிலும், தரையிலும் பயணம் செய்யும் வகையில் வாகனம் தொடர்பாக தமிழக அரசு முக்கிய தகவலை வெளியிட்டுள்ளது. சட்டப்பேரவையில் வினாக்கள் விடைகள் நேரத்தில், பேரிடர் மீட்பு பணிகளுக்கு தேவைப்படும் கனரக வாகனங்களை உள்ளூர் கொள்முதல் அல்லது வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்வதற்கு அரசு முன்வருமா எனவும் பஞ்சாபில் புயல் வந்த போது தண்ணீரிலும் தரையிலும் பயணிக்கும் வாகனங்கள் அறிமுகப்படுத்தப்பட்ட நிலையில் அவற்றை தமிழகத்தில் பயன்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் துணை சபாநாயகர் பிச்சாண்டி கேள்வி எழுப்பினார்.
இதற்கு பதிலளித்து பேசிய வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை அமைச்சர் கே கே எஸ் எஸ் ஆர் ராமச்சந்திரன், நிலச்சரிவு , வெள்ளம் போன்ற பேரிடரில் பயன்படுத்த தீயணைப்பு மீட்பு பணிகள் துறையினரிடம் 9 கனரக வாகன வகைகள் பயன்பாட்டில் உள்ளதாகவும், பேரிடர் மீட்பு பணிகளுக்காக கடந்த ஆண்டில் 193.93 கோடியில் மீட்பு உபகரணம் மற்றும் கனரக வாகனங்கள் வாங்கப்பட்டுள்ளதாகவும், பேரிடரை எதிர்கொள்ள அனைத்து வகை ஆயத்த நடவடிக்கையையும் தமிழக அரசு மேற்கொண்டு வருகிறது என்றார்.
மேலும், பஞ்சாப் மாநிலத்திற்கு அதிகாரிகளை அனுப்பி தண்ணீரிலும் தரையிலும் பயணிக்கும் வகையில் பேரிடர் மீட்பு வாகனங்களை வாங்க ஆய்வு மேற்கொண்டு உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனவும் கூறினார். அதேபோல், பேரிடருக்கு தனியாக நிதி உள்ளதாக கூறிய அவர், மத்திய அரசு நிதி அளித்தாலும் அளிக்காவிட்டாலும் தேவையான நிதியை பெற்று பேரிடர் உபகரணங்களை கொள்முதல் செய்வோம் எனவும் தெரிவித்தார்