கொரோனா தப்பு பண்ணிடுச்சு! இல்லேன்னா விளைவு வெறித்தனமா இருந்திருக்கும்.. விஞ்ஞானி வெச்ச ஸ்வீட்டும், வேட்டும்..

By Ganesh RamachandranFirst Published Jan 8, 2022, 7:55 PM IST
Highlights

ஒமைக்ரான் செல் அணுக்களின் சேர்க்கை மற்றும் உருவாக்கத்தில் நிகழ்ந்த தவறுகள்தான் இதற்கு காரணம். இந்த தவறு, ஒரு வகையில் மனித குலத்துக்கு நல்லதாகிவிட்டது

அவ்வை சண்முகி படத்தில் ஒரு காட்சி. மாமி கமல்ஹாசனை ஃபாலோ பண்ணிக்கொண்டு வந்த டில்லி கணேஷை மடக்கிப் பிடிப்பார் மாமியின் ஒன்சைடு லவ்வரான மணிவண்ணன். தன் அடிப்பொடிகளை வைத்து டில்லி கணேசனை வெளுத்தெடுப்பார். ஒரு கட்டத்தில் அடிப்பதை நிறுத்தச் சொல்லிவிட்டு கைவிரல்களை காட்டி அது எத்தனை என கேட்பார்! டில்லி கரெக்டாக சொன்னதும் ‘தெளிவா இருக்கான்டா மறுபடியும் அடிங்க’ என்பார்.

இதை இதைத்தான் கொரோனா இந்த உலகத்துக்கு செய்து கொண்டிருக்கிறது. இங்கே நாம்தான் டில்லிகணேஷ்! கொரோனாதான் மணிவண்ணன்.  ஒரு அலையை விட்டு அடி வெளுக்கிறது. அதில் அடிபட்டு நொந்து நூலாகி கொஞ்சம் கொஞ்சமாக நாம் மீண்டு உட்காருவோம். சில நாட்கள் நம்மை தெளியவிட்டு, பின் மீண்டும் அடுத்த அலையை அனுப்பி வெச்சு சாத்துகிறது. இப்படித்தான் தெளியவெச்சு, தெளியவெச்சு நம்மை வறுத்தெடுக்கிறது இந்த வைரஸ்.

இதோ தமிழகம் உட்பட பல மாநிலங்களில் லாக்-டவுன்கள் மெதுவாக துவங்கப்பட்டுவிட்டன. ’ஹும், இது எப்ப உச்சந்தொட்டு, அலை முடிஞ்சு, ஆசுவாசமாகி, மறுபடியும் நாம பழைய வேலையை பார்க்கிறது?’ என்று மக்கள் ஏங்க துவங்கிவிட்டனர்.

இந்நிலையில், இந்திய வம்சாவளியை சேர்ந்த விஞ்ஞானியான ரவீந்திர குப்தா, ஐரோப்பிய நாடான பிரிட்டனின் கேம்பிரிட்ஜ் பல்கலையின் நுண்ணுயிரியல் துறையில் பேராசிரியராக பணியாற்றுகிறார். இவர், ஒமைக்ரான் வைரஸ் குறித்து ஆய்வு செய்து ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில்…

“கொரோனாவின் புதிய வகை ஒமைக்ரான் வைரஸ் வேகமாக பரவினாலும் கூட அதன் பாதிப்பு மிதமாகவே உள்ளது. இதற்கு காரணம் கொரோனாதான்.

அதாவது ஒமைக்ரான் செல் அணுக்களின் சேர்க்கை மற்றும் உருவாக்கத்தில் நிகழ்ந்த தவறுகள்தான் இதற்கு காரணம். இந்த தவறு, ஒரு வகையில் மனித குலத்துக்கு நல்லதாகிவிட்டது. அதனால்தான் ஒமைக்ரானால் உருவாகும் பாதிப்பானது மிதமாகவே இருக்கிறது.

ஆனால், கொரோனாவில் இருந்து அடுத்து உருவாக இருக்கும் வைரஸ் மிக தீவிரமான பாதிப்பை ஏற்படுத்தக் கூடியதாக இருக்கும்! என்று ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன. அதனால் தடுப்பூசி திட்டத்தை விரைவுபடுத்தி, பாதுகாப்புக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும். இந்தியாவில் ‘டெல்டா’ வைரஸ் பாதிப்பு அதிகம் இருப்பதால், எதிர்ப்பு சக்தியும் அதிகமாக இருக்கிறது. அதேவேளையில் ஒமைக்ரானை கட்டுப்படுத்த தடுப்பு ஊசி மட்டும் போதாது, பூஸ்டர் டோஸ் அவசியம்.” என்று கூறியுள்ளார்.

ஹும், ஒமைக்ரானால் பாதிப்பு குறைவுன்னு ஒரு ஸ்வீட்டை கொடுத்து, அடுத்து ஒரு டேஞ்சரான வைரஸ் வருதுன்னு சொல்லி வேட்டு வெச்சுட்டீங்களே விஞ்ஞானி சார்!

வரட்டும், வரட்டும்! பார்த்துதானே ஆகணும்!

click me!