இனி இதுபோல் அசம்பாவிதங்கள் நடக்க கூடாது... கண்காணிக்க குழு அமைத்தார் தமிழக டிஜிபி!!

By Narendran SFirst Published Jan 8, 2022, 5:51 PM IST
Highlights

தமிழகத்தில் உள்ள அனைத்து துப்பாக்கி சுடும் பயிற்சி மையங்களில் உள்ள பாதுகாப்பு தொடர்பாக ஆய்வு மேற்கொள்ள குழு அமைத்துள்ளதாக தமிழக டிஜிபி  சைலேந்திரபாபு தெரிவித்துள்ளார். 

தமிழகத்தில் உள்ள அனைத்து துப்பாக்கி சுடும் பயிற்சி மையங்களில் உள்ள பாதுகாப்பு தொடர்பாக ஆய்வு மேற்கொள்ள குழு அமைத்துள்ளதாக தமிழக டிஜிபி  சைலேந்திரபாபு தெரிவித்துள்ளார். புதுக்கோட்டை மாவட்டம் நார்த்தாமலை அருகே அம்மாசத்திரத்தில் உள்ள அரசு துப்பாக்கி சுடும் பயிற்சி மையத்தில்  மத்திய தொழில் பாதுகாப்பு படை வீரர்கள் துப்பாக்கிச் சுடும் பயிற்சியில் ஈடுபட்டிருந்தனர். இந்த பயிற்சியின் போது வீரர் ஒருவரின் துப்பாக்கியிலிருந்து பாய்ந்த குண்டு தவறுதலாக 11 வயது சிறுவன் தலையில் பாய்ந்தது. கொத்தமங்கலம்பட்டி பகுதியைச் சேர்ந்த 11 வயது சிறுவன் புகழேந்தி, அரையாண்டு விடுமுறைக்காக பசுமலைப்பட்டியில் உள்ள பாட்டி வீட்டிற்கு சென்றுள்ளார். அங்கு சிறுவன் உணவு அருந்திக்கொண்டிருந்த போது வீட்டின் கூரையை துளைத்த குண்டு சிறுவனின் தலையில் பாய்ந்தது. அந்த வீரரின் துப்பாக்கியிலிருந்து வெளியேறிய 2 தோட்டாக்கள் சுமார் ஒன்றரை கிலோமீட்டர் தூரம் சென்றிருக்கிறது. அதில் ஒன்று முத்து என்பவரின் வீட்டின் சுவற்றை துளைத்தது.

மற்றொன்று வீட்டின் வெளியே நின்றிருந்த அவரது பேரன் புகழேந்தியின் தலையில் பாய்ந்ததாக கூறப்படுகிறது. இதில் ரத்த வெள்ளத்தில் சரிந்த சிறுவன் புதுக்கோட்டை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிறுவனை பரிசோதித்த மருத்துவர்கள் துப்பாக்கிக் குண்டு சிறுவனின் மூளைக்குள் சென்று பக்கவாட்டில் இருப்பதாக கூறி, அறுவை சிகிச்சை மூலம் குண்டை அகற்ற தஞ்சாவூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதையடுத்து, தஞ்சை அரசு மருத்துவமனையில் சிறுவனுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. 5 நாட்களாக சிகிச்சை பெற்று வந்த சிறுவன் புகழேந்தி சிகிச்சை பலனின்றி மருத்துவமனையில் உயிரிழந்தார். இதனை தொடர்ந்து பசுமலைப்பட்டி துப்பாக்கி சுடும் பயிற்சி தளம் நிரந்தரமாக மூடப்படும் என அமைச்சர் மெய்யநாதன் அறிவித்துள்ளார். இந்த நிலையில் இனி இதுபோன்ற அசம்பாவிதங்கள் நடைபெறாமல் இருக்க தமிழக டிஜிபி குழு அமைத்துள்ளார்.

இது தொடர்பாக தமிழக டிஜிபி சைலேந்திரபாபு வெளியிட்டுள்ள அறிக்கையில், வண்டலூர் காவலர் பயிற்சி அகாடமி இயக்குநர் தலைமையில் குழு ஒன்று அமைக்கப்பட்டு, மாநிலம் முழுதும் உள்ள அனைத்து துப்பாக்கி சுடும் பயிற்சி மையங்களில் உள்ள பாதுகாப்பு தொடர்பாக ஆய்வு மேற்கொள்ளப்படும். இந்த ஆய்வில் துப்பாக்கி சுடும் பயிற்சி மையங்கள் மலைக்குன்றுகள் சூழ்ந்த பகுதியில் அமைக்கப்பட்டுள்ளதா என்பதை உறுதிப்படுத்தவும், மக்கள் நடமாட்டம் நிறைந்த இடங்களில் அமைந்துள்ள துப்பாக்கி சுடும் பயிற்சி மையங்களின் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பிரத்யேகத் தடுப்புகள் எழுப்பி குண்டுகள் வெளியே செல்லாத வண்ணம் அமைக்கப்பட்டுள்ளதா என ஆய்வு மேற்கொள்ளப்படும். துப்பாக்கி சுடும் பயிற்சி மையங்களின் பாதுகாப்பு நடவடிக்கைகளை பலப்படுத்த, வேறு ஏதாவது ஆலோசனை வழங்க வேண்டும் என்றால் இந்தக் குழு வழங்கலாம்  என தெரிவித்துள்ளார்.

click me!