மக்களுக்கு அரசின் நலத் திட்டங்களை கொண்டு சென்று சேர்க்க புதிய முறையில் சட்ட சேவை முகாம்...

First Published Feb 1, 2018, 11:39 AM IST
Highlights
new Law Enforcement Service Camp to bring government welfare schemes to people.


பெரம்பலூர்

மக்களுக்கு அரசின் நலத் திட்டங்களை கொண்டுச்சென்று சேர்க்க பெரம்பலூர் மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் உள்ள சட்டப்பணிகள் ஆணைக்குழு அலுவலகத்தில் புதிய முறையில் சட்ட சேவை முகாம் நடைபெற்றது.    

தேசிய சட்ட பணிகள் ஆணைக் குழுவின் வழிகாட்டுதலின்படி, முன்னோடித் திட்டமாக மக்களுக்கு அரசின் நலத் திட்டங்கள், செயல்பாடுகள் மற்றும் சட்டப் பணிகள் ஆணைக்குழுவின் செயல்பாடுகள் சென்றடைய வேண்டும் என்ற நோக்குடன், அரசுத் துறையும் சட்டப் பணிகள் ஆணைக்குழுவும் இணைந்து புதிய முறையில் சட்ட சேவை முகாம் நடத்த உத்தரவிடப்பட்டு இருந்தது.

அதன்படி, பெரம்பலூர் மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக்  குழுவும், பெரம்பலூர் மாவட்ட நிர்வாகமும் இணைந்து, ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் உள்ள மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு அலுவலகத்தில் சட்ட சேவை முகாமை நடத்தியது.

இந்த புதிய முறை சட்ட சேவை முகாம் மற்றும் துறைகள் ஏற்படுத்திய அரங்கங்களை, பெரம்பலூர் மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக்குழுத் தலைவரும், முதன்மை மாவட்ட அமர்வு நீதிபதியுமான எஸ். பாலராஜமாணிக்கம் திறந்து வைத்தார்.

அதனைத் தொடர்ந்து, பெரம்பலூர் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு, தொழிலாளர் துறை, மாவட்ட குழந்தைகள் பாதுகாப்புத் திட்டம் சார்பில் அமைக்கப்பட்டிருந்த அரங்கங்களில் மக்கள் மற்றும் மாணவ, மாணவிகளுக்கு சட்ட விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

பெரம்பலூர் மகிளா நீதிமன்ற அமர்வு நீதிபதி என். விஜயகாந்த், தலைமை குற்றவியல் நடுவர் எம். சஞ்சீவி பாஸ்கர், சார்பு நீதிபதிகள் எஸ். ஜெயந்தி, எம். வினோதா, மாவட்ட உரிமையியல் நீதிபதி பி. மகேந்திரவர்மா,

நீதித்துறை நடுவர் கே. மோகனப்பிரியா, வழக்குரைஞர்கள் ராதாகிருஷ்ணமூர்த்தி, வாசுதேவன், ஆர். மணிவண்ணன், முகம்மது இலியாஸ், அரசு வழக்குரைஞர் சித்ரா உள்பட மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.

இதற்கான ஏற்பாடுகளை, மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு நிர்வாக அலுவலர் டி. வெள்ளைச்சாமி செய்திருந்தார்.

click me!