
நீலகிரி
வன உரிமை சட்டத்தின்படி ஆதிவாசி குடும்பங்களுக்கு தலா 10 ஏக்கர் நிலமும், அவர்கள் குடியிருக்க தரமான வீடும் கட்டி கொடுக்க வேண்டும் என்று மண்ணுரிமை மீட்பு போராட்ட குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
நீலகிரி மாவட்டம், கூடலூரில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மண்ணுரிமை மீட்பு குழு கூட்டம் நடைப்பெற்றது.
இந்தக் கூட்டத்திற்கு குழு ஒருங்கிணைப்பாளர் வாசு தலைமை வகித்தார். பொருளாளர் சளிவயல் சாஜி, துணை ஒருங்கிணைப்பாளர் சகாதேவன், துணை செயலாளர்கள் டி.பாலகிருஷ்ணன், முகமது கனி, அனிபா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இதில், அரசியல் கட்சி நிர்வாகிகள், பொதுநல அமைப்பினர் கலந்து கொண்டு தங்களது கருத்துக்களையும், நிலப்பிரச்சினைக்கு தீர்வு காணப்படாததால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து விளக்கி பேசினர்.
இந்தக் கூட்டத்தில், "பட்டா வழங்க தடையாக உள்ள சட்டம் 1168-ஐ ரத்து செய்ய வேண்டும்.
முடிவு செய்யப்படாத பிரிவு-17 மற்றும் 53 நிலத்தில் உள்ள சிறு விவசாயிகள், பொதுமக்களுக்கு பட்டா வழங்க வேண்டும்.
வன உரிமை சட்டத்தின்படி ஆதிவாசி குடும்பங்களுக்கு தலா 10 ஏக்கர் நிலமும், அவர்கள் குடியிருக்க தரமான வீடும் கட்டி கொடுக்க வேண்டும்.
அரசு நிலங்களில் குடியிருக்கும் 10 ஆயிரம் பேரின் வீடுகளுக்கு மின் இணைப்பு கிடைக்க வருவாய் துறையினர் தடையில்லா சான்றிதழ்கள் வழங்க வேண்டும்.
உயர்நீதிமன்றம் மற்றும் அதன் கட்டுப்பாட்டில் உள்ள கண்காணிப்பு கமிட்டியோ (எம்பவர்) குடியிருப்புகளுக்கு மின்சாரம் வழங்கக்கூடாது என கூறவில்லை. ஆனால் உயர்நீதிமன்றத்தை மேற்கோள் காட்டி அதிகாரிகள் மின் இணைப்பு மறுக்கப்படுவதை ஏற்க முடியாது. விவசாயிகள், பொதுமக்களின் பிரச்சினைக்கு தீர்வு கிடைக்கும் வரை ஒற்றுமையுடன் போராட்டங்கள் நடத்தப் படும்.
சிறு விவசாயிகள், மக்களுக்கு பட்டா, மின்சாரம் வழங்க வலியுறுத்தி ஏப்ரல் 23-ஆம் தேதி ஒரு இலட்சம் பேரை கூடலூரில் திரட்டி பழைய பேருந்து நிலையம் தொடங்கி நூதன போராட்டம் நடத்தப்படும்.
அதன்படி கோரிக்கைகள் நிறைவேறும் வரை புதிய பேருந்து நிலையம் வரை சாலையில் சமைத்து உண்டு படுத்து உறங்கும் போராட்டம் நடத்தப்படும்.
இதற்காக ஊராட்சி, பேரூராட்சி, நகராட்சி பகுதிகளில் பல்வேறு விளக்க கூட்டங்கள் நடத்தப்படும்" போன்ற தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.