
நீலகிரி
நீலகிரியில் உள்ள கிராமம் ஒன்றில் மேய்ச்சலுக்கு சென்ற ஆடுகளை சிறுத்தைப்புலி கடித்துக் கொன்றுள்ளது. இதில், போன மாதம் 10 ஆடுகளையும், இந்த மாதம் 10 ஆடுகளையும் கொன்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
நீலகிரி மாவட்டம், கோத்தகிரி அருகே உள்ளது ஆடத்தொரை கிராமம். இந்த கிராமத்தில் கடந்த சில நாள்களாக சிறுத்தைப்புலியின் நடமாட்டம் உள்ளது.
இந்த நிலையில் இந்த கிராமத்தைச் சேர்ந்த சேகர், செல்வராஜ், சென்னராஜ் ஆகியோர் தங்களது ஆடுகளை மேய்ச்சலுக்காக அங்குள்ள தேயிலை தோட்டம் அருகேவிட்டு இருந்தனர்.
வழக்கமாக ஆடுகள் மேய்ச்சலை முடித்துவிட்டு வீடு திரும்பிவிடும். ஆனால், நீண்ட நேரம் ஆகியும் ஆடுகள் வீடு திரும்பவில்லை.
இதனையடுத்து ஆடுகளை தேடி மக்கள் சென்றபோது குடியிருப்பு பகுதிக்கு சற்று தொலைவில் தேயிலை தோட்டம் அருகே சில ஆடுகளின் பாதி உடல் மட்டும் கிடந்ததைப் பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். உடனே கட்டபெட்டு வனத்துறையினருக்கு தகவல் கொடுத்தனர்.
வனத்துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து பார்வையிட்டபோது சிறுத்தைப்புலி கடித்துக்கொன்றதில் ஆடுகள் இறந்தது தெரியவந்தது.
சேகருக்கு சொந்தமான 2 ஆடுகளும், செல்வராஜுக்கு சொந்தமான 4 ஆடுகளும், சென்னராஜுக்கு சொந்தமான 4 ஆடுகளும் என மொத்தம் 10 ஆடுகளை சிறுத்தைப்புலி கடித்துக் கொன்றுள்ளது. ஆடுகளின் உடல்களை பாதி தின்றும் மீதியை தேயிலை தோட்டங்களில் போட்டுவிட்டும் சிறுத்தைப்புலி சென்றுவிட்டது.
இதே பகுதியை சேர்ந்த மணி என்பவருக்கு சொந்தமான 10 ஆடுகளை கடந்த மாதம் சிறுத்தைப்புலி கடித்துக்கொன்றது என்பது குறிப்பிடத்தக்கது.
இதுகுறித்து கட்டபெட்டு வனச்சரகர் கணேசன், "சிறுத்தைப்புலி தாக்கி இறந்த ஆடுகளின் உரிமையாளர்களுக்கு உரிய நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்.
சிறுத்தைப்புலியின் நடமாட்டத்தை கண்காணிக்க வனத்துறை ஊழியர்கள் பணியில் அமர்த்தப்பட்டு உள்ளனர்.
தொடர்ந்து சிறுத்தைப்புலியின் நடமாட்டம் தென்பட்டால் கூண்டு வைத்து பிடிக்க நடவடிக்கை எடுக்கப்படும்" என்று தெரிவித்தார்.