
நாமக்கல்
அடுத்த மூன்று நாள்களுக்கு கோழிகளில் தீவன எடுப்பு நிலையற்றதாக இருக்கும் என்பதால் முட்டை ஓட்டின் தரம் குறைய வாய்ப்புள்ளது என்று கால்நடை மருத்துவக் கல்லூரி வானிலை ஆலோசனை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
நாமக்கல் கால்நடை மருத்துவக் கல்லூரி வானிலை ஆலோசனை ஆய்வு மையம் நேற்று செய்திக் குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.
அதில், "அடுத்த மூன்று நாள்களுக்கு வானம் தெளிவாகவும், மழை இன்றியும் காணப்படும். பின்பனிக் காலம் என்பதால் பகல் மற்றும் இரவு வெப்ப அளவுகள் உயர்ந்தும், குறைந்தும் மாறி மாறி காணப்படும். இதனால் கோழிகளில் தீவன எடுப்பும் மாறி மாறி காணப்படும்.
இதன் விளைவாக முட்டை ஓட்டின் தரம் குறையும் வாய்ப்புள்ளது. குறிப்பாக வயது அதிகமான (50 வாரத்திற்கு மேல்) கோழிகளின் முட்டை ஓட்டின் தரம் கவனிக்கப்பட வேண்டும்.
தீவனத்தில் சற்றே அதிகமாக கால்சியம், கிளிசல் சேர்க்க வேண்டும். மேலும் இரண்டு நாள்களுக்கு ஒரு முறை கோழிகளுக்கு இரண்டு முதல் மூன்று கிராம் வரை உடைத்த கிளிசல்களை தீவனத் தட்டில் தூவ வேண்டும்" என்று அதில் கூறப்பட்டு உள்ளது.