
ஊதிய உயர்வு கோரி வேலைநிறுத்தப் போராட்டம் நடத்திய அரசு போக்குவரத்து ஊழியர்களுக்கு 7 நாட்களுக்கான சம்பளத்தை பிடித்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த ஜனவரி 4ஆம் தேதி முதல் 11ஆம் தேதி வரை ஊதிய உயர்வு, ஓய்வூதிய நிலுவைத் தொகைகளை உடனே வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி அரசுப் போக்குவரத்து ஊழியர்களின் தொழிற்சங்கங்களும் போராட்டம் நடத்தினர். இவர்களின் இந்த போராட்டத்தால் பொதுமக்கள் கடுமையான இன்னல்களுக்கு ஆளானார்கள்.
பலமுறை அரசுடன் நடைபெற்ற பேச்சுவார்த்தை நடந்தும் தோல்வியில் முடிந்தது நீதிமன்றம் தலையிட்டு, ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில், போக்குவரத்துத் தொழிலாளர்களின் பிரச்சினைகளுக்குத் தீர்வு காணப்படும் என்று உறுதியளித்தது. அரசின் 2..44 மடங்கு ஊதிய உயர்வைத் தற்காலிகமாக ஏற்றுத் தொழிலாளர்கள் போராட்டத்தை வாபஸ் பெற்று மீண்டும் வேலைக்கு திரும்பினர். அப்போது, போக்குவரத்து ஊழியர்கள் மீது நீதிமன்ற அனுமதியின்றி எந்த நடவடிக்கை எடுக்கக் கூடாது என்றும் போராட்டம் நடத்திய 7 நாட்களுக்கான சம்பளத்தைப் பிடிக்கக் கூடாது என்றும் நீதிமன்றம் அறிவுறுத்தியிருந்தது.
ஆனால் நீதிமன்றத்தின் இந்த அறிவிப்பையும் மீறி போக்குவரத்து ஊழியர்களின் சம்பளத்தில் பிடித்தம் செய்யப்பட்டு நேற்று பே ஸ்லிப் வழங்கப்பட்டுள்ளது. இது போக்குவரத்து ஊழியர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதில் 7 நாட்களுக்கு சம்பளத்தை கட் பண்ணியிருக்கிறார்கள்.
வேலைநிறுத்தம் 8 நாட்கள் நடைபெற்றாலும், முதல் மற்றும் கடைசி நாட்களில், பாதி நேரமே வேலைநிறுத்தம் செய்யப்பட்டதால், அந்த 2 நாட்களை ஒரு நாளாகக் கருதி 7 நாட்களுக்கு , சம்பள பிடித்தம் செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
வேலைநிறுத்தத்தில் ஈடுபட்ட சுமார் 1 லட்சத்து 10 ஆயிரம் ஊழியர்களில் சாதாரண ஊழியர்கள் முதல் மூத்த ஊழியர்கள் வரை அனைவருக்கும் சம்பளப் பிடித்தம் செய்யப்பட்டுள்ளது. முதுநிலை அடிப்படையில் ரூ.3,500 முதல் ரூ.10 ஆயிரம் வரை சம்பளத்தைப் பெற முடியாது என்று கூறப்படுகிறது.