
சென்னை உயர் நீதிமன்றத்துக்கு 15 புதிய நீதிபதிகளை நியமனம் செய்து குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி ஒப்புதல் வழங்கியதை அடுத்து புதிய நீதிபதிகள் இன்று பதவி ஏற்றனர்.
இதையடுத்து, நீதிபதிகள் பார்தீபன், சுப்பிரமனியன், கோவிந்தராஜ், சுந்தர், சுரேஷ் குமார், நிஷா பானு, ரமேஷ், சுப்பிரமணியம், அனிதா சுமந்த், பசீர் அகம்மது, ரவிந்திரன், பாஸ்கரன், வேல்முருகன், ஜெயசந்திரன், மற்றும் கார்த்திகேயன் ஆகிய 15 நீதிபதிகள் சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகளாக பதவியேற்றனர்.
புதிய நீதிபதிகளின் பதவியேற்பு விழா இன்று காலை 10.30 மணிக்கு சென்னை உயர்நீதி மன்றத்தில் துவங்கியது. புதிய நீதிபதிகளுக்கு சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்சய்கிஷன் கவுல் பதவி பிராமணம் செய்து வைத்தார்.
பதவியேற்பு நிகழ்ச்சியில் அரசு தலைமை வழக்கறிஞர் முத்துகுமாரசாமி, பார் கவுன்சில் தலைவர் செல்வம், சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞர் சங்க தலைவர் பால்கனகராஜ் ஆகியோர் பங்கேற்று வாழ்த்துரை வழங்கினர்.
சென்னை உயர் நீதிமன்றத்துக்கு மொத்தம் அனுமதிக்கப்பட்ட நீதிபதிகளின் எண்ணிக்கை 75. தற்போது தலைமை நீதிபதி எஸ்.கே.கவுல் தலைமையில் மொத்தம் 39 நீதிபதிகள் பணியில் உள்ளனர். 36 நீதிபதிகள் பணியிடம் காலியாக உள்ளநிலையில் தற்போது 15 நீதிபதிகள் பதவியேற்றுள்ளனர். இதனால் நீதிபதிகள் எண்ணிக்கை 54 ஆக உயர உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.