தமிழகத்தில் கொட்டப்போகிறது கனமழை… உருவாகிறது புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி!!

By Narendran SFirst Published Nov 9, 2021, 10:49 AM IST
Highlights

தெற்கு வங்கக் கடல் பகுதியில் இன்று உருவாகும் புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி அடுத்த 24 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறி மேற்கு வடமேற்கு திசையில் நகர்ந்து தமிழக கரையை நெருங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் தமிழகத்தில் கனமழை பெய்யும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வங்கக்கடலில் இன்று மேலும் ஒரு குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாகும் என்பதால்,  தமிழகத்தில் 5 நாட்களுக்கு கனமழை பெய்யும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இதன்காரணமாக 6 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. இதனால், தமிழகத்தில் 20 செ.மீட்டருக்கும் அதிகமாக மழை பெய்யும் என்று கணிக்கப்பட்டுள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. இதையடுத்து, மாநிலம் முழுவதும் மழை பாதிப்பு  தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்த தமிழக அரசு, மாவட்ட வாரியாக குழுக்களை அமைத்துள்ளது. தமிழகத்தில் கடந்த அக்டோபர் மாதம் 20 ஆம் தேதி தொடங்க வேண்டிய வடகிழக்கு பருவமழை, சற்று தாமதமாக தொடங்கியது. இருப்பினும் எதிர்பாராத அளவுக்கு கொட்டித்தீர்த்த மழையால், தமிழகத்தில் பெரும்பாலான இடங்கள் மழை நீரால் பாதிக்கப்பட்டுள்ளது. சென்னையில் கடந்த 6 ஆம் தேதி இரவு விடிய விடிய 23 செமீ மழை கொட்டித் தீர்த்தது. அதனால், சென்னை நகரின் பெரும்பாலான இடங்களில் மழை நீர் சூழ்ந்து, பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

மழை நீரை வெளியேற்றும் பணியில் அரசு தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. தேங்கிய நீரை அப்புறப்படுத்தினாலும் கூட, இடைவிடாத தொடர் மழையால், தண்ணீர் பல இடங்களில் மீண்டும் மீண்டும் தண்ணீர் தேங்கும் நிலை காணப்படுகிறது. இந்நிலையில், தமிழகத்தில் மேலும் மழை நீடிக்கும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. அக்டோபர் மாதம்  தொடங்கி நேற்று வரை பெய்த மழையின் அளவைப் பொறுத்தவரையில், தமிழகத்தில் 43 சதவீதம் அதிக மழை பெய்துள்ளது.  இந்நிலையில், மழை நீடித்து வருவதுடன் தமிழகத்தில் பெய்த மழையால் நீர்தேக்கங்கள், ஏரிகள் மற்றும் நீர் நிலைகள் நிரம்பி வழிகின்றன. ஆறுகளிலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு பல ஊர்கள் துண்டிக்கப்பட்டுள்ளது. சென்னையை சுற்றியுள்ள அனைத்து ஏரிகளும் நிரம்பி வழிகின்றன. அதனால், பாதுகாப்பு கருதி உபரி நீர் திறக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் தெற்கு வங்கக் கடல் பகுதியில் இன்று ஒரு புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாக உள்ளது.  இது அடுத்த 24 மணி நேரத்தில்  காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறி மேற்கு  வடமேற்கு திசையில் நகர்ந்து தமிழக கரையை நெருங்கும். இதை அடுத்து திருநெல்வேலி, தென்காசி, தேனி, திண்டுக்கல், நீலகிரி, கோவை, மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழை முதல் மிக கனமழை பெய்யும் என்பதால்  அதனால் அந்த மாவட்டங்களுக்கு இந்திய வானிலை ஆய்வு மையம்  ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுத்துள்ளது.

இதுதவிர ராமநாதபுரம், தூத்துக்குடி, மதுரை, கடலூர், புதுக்கோட்டை உள்ளிட்ட டெல்டா மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய கனமழையும் பிற மாவட்டங்களில் மிதமான மழை பெய்யும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.  தெற்கு ஆந்திரா மற்றும் தமிழக கடலோரப் பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய இலங்கை கடற்கரைப் பகுதிகளில் மணிக்கு 60 கிமீ வேகத்தில் சூறாவளிக் காற்று 11 ஆம் தேதி வரை வீசும் என்பதால் மேற்கண்ட பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் என வானிலை மையம் அறிவுறுத்தியுள்ளது. மேலும் ஆழ்கடல் பகுதிக்கு மீன் பிடிக்க சென்ற மீனவர்கள் கரைக்கு திரும்பவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

click me!