கொட்டித்தீர்க்கும் கனமழை… தமிழகத்திற்கு அடுத்த 2 நாட்களுக்கு ரெட் அலார்ட்!!

By Narendran SFirst Published Nov 9, 2021, 10:36 AM IST
Highlights

அடுத்த 2 நாட்களுக்கு தமிழகத்தில் அதிகனமழை பெய்யும் என்பதால் இந்திய வானிலை மையம் தமிழகத்திற்கு ரெட் அலார்ட் எச்சரிக்கை விடுத்துள்ளது. 

அடுத்த 2 நாட்களுக்கு தமிழகத்தில் அதிகனமழை பெய்யும் என்பதால் இந்திய வானிலை மையம் தமிழகத்திற்கு ரெட் அலார்ட் எச்சரிக்கை விடுத்துள்ளது. வடகிழக்கு பருவமழை மற்றும் மேலடுக்கு சுழற்சி காரணமாக கடந்த சில நாட்களாக தமிழகத்தில் பரவலாக மழை பெய்து வருகிறது. சில இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய கனமழையும் பெய்து வருகிறது. இதனால் நீர்நிலைகள் நிரம்பியதோடு வெள்ளமும் ஏற்பட்டது. இதுமட்டுமின்றி ஏரி மற்றும் அணைகளில் நீர் வரத்து அதிகரித்துள்ளது. இதற்கிடையே கடந்த 6 ஆம் தேதி சென்னையில் கனமழை பெய்தது. இரவு முழுக்க நீடித்த மழையால் சென்னை சாலைகள் வெள்ளக்காடாக  காட்சியளித்தன. மேலும் பல பகுதிகளில் வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்தது. சுரங்கப்பாதைகளில் தண்ணீர் தேங்கியதால் சுரங்கப்பாதைகள் மூடப்பட்டன. மேலும் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. இதனால் மக்கள் கடும் அதிக்குள்ளாகியுள்ளனர். இந்த நிலையில் இன்று தெற்கு வங்கக்கடல் பகுதியில் ஒரு புதிய குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப்பகுதி உருவாகிறது. இது அடுத்த 24 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று மேற்கு வடமேற்கு திசையில் நகர்ந்து தமிழக கரையை நெருங்க கூடும் என்றும் படிப்படியாக வலுப்பெற்று காற்றழுத்த தாழ்வு மண்டலமாக உருமாறி வரும் 11ஆம் தேதி வடதமிழக கடற்கரை பகுதிகளை நெருங்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன் காரணமாக இன்று திருநெல்வேலி, தென்காசி, தேனி, திண்டுக்கல்,நீலகிரி, கோயம்புத்தூர் மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும் என்றும் தூத்துக்குடி, ராமநாதபுரம், மதுரை, கடலூர், புதுக்கோட்டை, டெல்டா மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் கன மழையும், ஏனைய மாவட்டங்களில் பெரும்பாலான இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழையும் பெய்ய கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தமிழகத்திற்கு நாளையும், நாளை மறுநாளும் ரெட் அலர்ட்  எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. நாளை டெல்டா மாவட்டங்கள், கடலூர், பெரம்பலூர், அரியலூர், கள்ளக்குறிச்சி மற்றும் புதுச்சேரி காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில்  கன முதல் மிக கனமழையும், ஒரே இடங்களில் இடி மின்னலுடன் கூடிய அதி கனமழையும்  பெய்யக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில், திருவள்ளூர், சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், ராமநாதபுரம், புதுக்கோட்டை, சிவகங்கை, திருவண்ணாமலை மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மிக கனமழை பெய்யக்கூடும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதன் எதிரொலியால், இன்று தமிழகத்தில் 17 மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளித்து அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் உத்தரவிட்டுள்ளனர். கடலூர், நாகை, திருவாரூர், தஞ்சை, விருதுநகர், ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம், விழுப்புரம், மயிலாடுதுறை, புதுக்கோட்டை, மதுரை, சிவகங்கை, நெல்லை, தென்காசி ஆகிய மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. மேலும் வெள்ளப்பெருக்கு ஏற்படும் அபாயம் உள்ளதால் தாழ்வான பகுதி மற்றும் ஆற்றங்கரையோரம் உள்ள மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு  அறிவுறுத்தப்பட்டுள்ளது.  

click me!