நெல்லை கல்குவாரி விபத்து .. கனிமவளத்துறை இயக்குனர் சஸ்பெண்ட்.. கல்குவாரி உரிமையாளர் வங்கி கணக்கு முடக்கம்...

By Thanalakshmi VFirst Published May 19, 2022, 4:17 PM IST
Highlights

திருநெல்வேலி மாவட்டம் முன்னீர்பள்ளம் அருகே  அடைமிதிப்பான் குளம் கல்குவாரில் நேரிட்ட விபத்து தொடர்பாக கனிம வளத்துறை உதவி இயக்குநர்‌ வினோத்‌ பணியிடை நீக்கம்‌ செய்யப்பட்டுள்ளார்.
 

நெல்லை மாவட்டம் அடைமிதிப்பான்குளம் பகுதியில் செயல்பட்டு வந்த வெங்கடேஸ்வரா கல்குவாரியில் கடந்த 14-ம் தேதி நள்ளிரவில் பாறை சரிந்து விபத்து ஏற்பட்டது. சுமார் 350 அடி ஆழம் கொண்ட கல்குவாரி உள்ளே வேலை செய்துகொண்டிருந்த முருகன், விஜயன், செல்வன், மற்றொரு முருகன், ராஜேந்திரன், செல்வகுமார் ஆகிய 6 பேர் பாறை சரிவில் சிக்கிக் கொண்டனர்.

இதனையடுத்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்புத்துறை மற்றும் காவல்துறையினர் மீட்புப்பணியில் ஈடுப்பட்டனர். கடந்த செவ்வ்வாய்கிழமை முருகன், விஜயன் ஆகியோர் காயங்களுடன் மீட்கப்பட்டனர்.  பெரிய பெரிய பாறை கற்கள் சரிந்ததால் மீட்புபணி தொடர்வதில் தொய்வு ஏற்பட்டது. இதனையடுத்து 15 மணி நேர போராட்டத்திற்கு பிறகு, காக்கைக்குளம் செல்வம் என்பவர் மீட்கப்பட்டார். ஆனால் அவர் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லும் வழியிலேயே பரிதாபமாக உயிரிழந்தார். 

மேலும் படிக்க: 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு குறித்து முக்கிய அப்டேட்.. விடைத்தாள் திருத்தம் எப்போது..? தேதி அறிவிப்பு..

பிறகு அரக்கோணத்திலிருந்து தேசிய பேரிடர் மீட்புப்படையைச் சேர்ந்த 30 பேர் கொண்ட குழுவினர் வரவழைக்கப்பட்டு தேடுதல் பணி நடந்தது. முருகன் என்ற மற்றொரு நபர் சடலமாக மீட்கப்பட்டார். இந்நிலையில் நேற்று இரவு மேலும் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். தொடர்ந்து 6 ஆவது நபரை தேடும்‌ பணி 5-ஆவது நாளாக இன்று நடைபெற்று வருகிறது. இதுகுறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் இதுவரை 2 பேரை கைது செய்துள்ளனர். மேலும் தலைமறைவாக இருக்கும் குவாரியின் உரிமையாளரான சேம்பர் செல்வராஜ், அவர் மகன் குமார் ஆகியோரை தேடும் பணி முடுக்கி விடப்பட்டுள்ளது.

கல்குவாரியில் நடைபெற்றும் வரும் மீட்பு பணியை பார்வையிட்ட மாவட்ட ஆட்சியர்‌ விஷ்ணு, பின்னர்‌ செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர்,”கல்குவாரி விபத்தில்‌ சிக்கி உயிருடன்‌ மீட்கப்பட்டு மருத்துவமனையில்‌ சிகிச்சை பெற்று வருவோர்‌ சொன்ன தகவலின்‌ அடிப்படையில்‌, குவாரியில்‌ சிக்கியுள்ளோரை தேடும்‌ பணி நடைபெற்று வருகிறது. சுமார்‌ 100 டன்‌ எடையுள்ள பாறைகளுக்கு அடியில்‌ சிக்கி இருக்கலாம்‌ என கருதப்படுகிறது.எனவே, அந்தப்‌ பாறைகளை உடைத்து அப்புறப்படுத்தி அதன்‌ பின்னர்‌ அவரை மீட்கும்‌ முயற்சியில்‌ ஈடுபட்டு வருகின்றனர்‌. இந்த குவாரி விபத்து தொடர்பாக கனிம வளத்துறை உதவி இயக்குநர்‌ வினோத்‌ பணியிடை நீக்கம்‌ செய்யப்பட்டுள்ளார்‌ என்று தெரிவித்தார்.

மாவட்டம் முழுவதும் தாலுகா வாரியாக குழு அமைக்கப்பட்டு ஆய்வு பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதுவரை முறைகேடாக செயல்பட்ட 6 குவாரிகள்‌ மூடப்பட்டு, சுமார்‌ ரூ.20 கோடி அபராதம்‌ விதிக்கப்பட்டுள்ளது. விபத்து நேரிட்ட குவாரியில்‌ இருந்து வெளியே கல்‌ கொண்டு செல்வதற்கான நடை சீட்டு உரிமம்‌ கடந்த 2021 ஆம்‌ ஆண்டு மார்ச்‌ மாதமே ரத்து செய்யப்பட்டிருந்தது. மேலும்‌ விபத்து நடந்து அடுத்த நாளான 15 ஆம்‌ தேதியே குவாரிக்கான குத்தகை தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளது.  மேலும்‌,  மாவட்டத்தில்‌ உள்ள சுமார்‌ 55 குவாரிகளை ஆய்வு செய்யும்‌ பணி மேற்கொள்ளப்பட்டு வருவதாக அவர் கூறினார்.

குவாரி விபத்து தொடர்பாக நாங்குநேரி காவல்‌ உதவி கண்காணிப்பாளர்‌ ராஜாத்‌ சதுர்வேதி தலைமையில்‌ 3 தனிப்படைகள்‌ அமைக்கப்பட்டு விசாரணை நடைபெற்று வருவதாகவும் இதுவரை இருவர்‌ கைது செய்யப்பட்டுள்ளதாகவும் மாவட்ட எஸ்.பி தெரிவித்துள்ளார்.கல்குவாரி விபத்து தொடர்பாக குற்றவாளி யாராக இருந்தாலும் அவர் மீது நடவடிக்கை எடுக்கப்படும். தலைமறைவாக கல்குவாரி உரிமையாளருக்கு சொந்தமான வங்கி கணக்கு முடக்கப்பட்டுள்ளது. மேலும் திசையன்விளையில் உள்ள அவருக்கு சொந்த வீடு மற்றும்‌ அலுவலகம்‌ ஆகியவற்றில்‌ சோதனை நடைபெற்று வருவதாக கூறினார்.

மேலும் படிக்க: மணிமுத்தாறு அருவியில் வெள்ளப்பெருக்கு… சுற்றுலா பயணிகள் குளிக்க தடை!!

click me!