நெல்லையில் பரவலாக மழை: குற்றால அருவிகளில் வெள்ளப்பெருக்கு

First Published Nov 5, 2016, 1:28 AM IST
Highlights


நெல்லை மாவட்டத்தில் பரவலாக மழை பெய்து வருவதால் குற்றாலம் அருவிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் சுற்றுலா பயணிகளை, இரவு நேரங்களில் குளிக்க தடை விதிக்கப்பட்டு உள்ளது.

நெல்லை மாவட்டத்தில் உள்ள சுற்றுலா தலமான குற்றாலத்தில் ஜூன் முதல் ஆகஸ்ட் மாதம் வரை அருவியில் தண்ணீர் பெருக்கு அதிகரிக்கும். இதயொட்டி ஏராளமான சுற்றுலா பயணிகள் அங்கு செல்வார்கள். இந்த சீசன் முடிந்தாலும், அருவியில் தண்ணீர் வந்தபடியே இருக்கும்.

இந்த ஆண்டு பருவமழை சரிவர இல்லாததால் குற்றாலத்தில் சீசன் தாமதமாக தொடங்கியது. ஜூலை, ஆகஸ்ட் மாதங்களில் சீசன் மந்தமாக இருந்தது. செப்டம்பருக்கு பிறகும் அருவிகளில் தண்ணீர் கொட்டவில்லை. இதனால், சுற்றுலா சென்ற பயணிகள் ஏமாற்றம் அடைந்தனர்.

இந்நிலையில் கடந்த ஒரு வாரமாக நெல்லை மாவட்டத்தில் உள்ள அணைப்பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது. மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியிலும், தென்காசி பகுதியிலும் மழை பெய்து வருவதால் குற்றாலம் அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து விழுகிறது.

இதனால் இரவு நேரங்களில் அருவிகளில் குளிக்க தடை விதிக்கப்பட்டது. எனினும் அதிகாலை முதல் அருவிகளில் குளிக்க சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. தென்காசி, குற்றாலம் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று முன்தினம் இரவு முதல் அதிகாலை வரை பலத்த மழை பெய்தது. இதனால் குற்றாலம் அருவிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.

இதையடுத்து இரவில் அருவிகளில் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டது. நேற்று காலை தண்ணீரின் அளவு குறைந்ததால் குளிக்க அனுமதிக்கப்பட்டனர். தற்போது இதமான சூழல் நிலவுவதால் ஏராளமான சுற்றுலா பயணிகள் குற்றாலத்துக்கு வந்து செல்கின்றனர். 

click me!