
கமிஷன் தொகையை உயர்த்தக்கோரி பெட்ரோல் விற்பனை நிலையங்களை மூடுவதற்கு உரிமையாளர்கள் முடிவு செய்துள்ளனர். இந்நிலையில் மும்பையில் இன்று எண்ணெய் நிறுவனங்களுடன் பேச்சுவார்த்தை நடத்துகின்றன.
இந்திய பெட்ரோலிய நிறுவனங்கள் பெட்ரோல் விற்பனை கமிஷன் தொகையை உயர்த்தி வழங்க (டீலர் மார்ஜின்) வேண்டும் என்பது உள்ளிட்ட சில கோரிக்கைகளை வலியுறுத்தி பெட்ரோல் - டீசல் விற்பனை நிலையங்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளன.
அதன்படி கடந்த மாதம் 19 மற்றும் 26 ஆகிய தேதிகளில் அனைத்து பெட்ரோல் விற்பனை நிலையங்களிலும் 15 நிமிடங்கள் விளக்குகள் அணைக்கப்பட்டு போராட்டம் நடந்தது.
இதன் தொடர்ச்சியாக, எண்ணெய் நிறுவனங்களிடம் இருந்து பெட்ரோல் கொள்முதல் செய்வதை 2 நாட்களுக்கு நிறுத்தி வைத்து போராட்டம் நடத்தபோவதாக தமிழ்நாடு பெட்ரோலிய விற்பனையாளர்கள் சங்கம் தெரிவித்தது. அதன்படி நேற்று முதல்கட்டமாக போராட்டம் நடந்தது.
திட்டமிட்டப்படி பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்களிடம் இருந்து பெட்ரோல் கொள்முதல் செய்வதை எல்லா பெட்ரோல் நிலையங்களும் நேற்று நிறுத்தின. தமிழகம் முழுவதும் உள்ள 4 ஆயிரத்து 470 பெட்ரோல் விற்பனை நிலையங்களும், புதுச்சேரியில் உள்ள 300 பெட்ரோல் விற்பனை நிலையங்களும் நேற்று பெட்ரோல் கொள்முதல் செய்யவில்லை.
மேலும், 2ம் நாளாக இன்று எண்ணெய் நிறுவனங்களிடம் இருந்து பெட்ரோல் கொள்முதல் செய்யப்போவது இல்லை என்றும் பெட்ரோலிய விற்பனையாளர் சங்கம் தெரிவித்து உள்ளது. இந்த போராட்டம் எந்தவகையிலும் பயனாளர்களை பாதிக்காத வகையில் நடக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் மும்பையில் இன்று காலை 11.30 மணியளவில் எண்ணெய் நிறுவன உயர் அதிகாரிகள் - பெட்ரோலிய பொருட்கள் விற்பனையாளர்கள் சங்க பிரதிநிதிகள் இடையே பேச்சுவார்த்தை நடைபெற உள்ளது. இந்த பேச்சுவார்த்தையில் ஒவ்வொரு மாநிலத்தில் இருந்தும் பெட்ரோலிய பொருட்கள் விற்பனையாளர்கள் சங்க பிரதிநிதிகள் பங்கேற்று கோரிக்கைகளை முன்வைத்து பேச உள்ளனர்.
இந்த பேச்சுவார்த்தையின் நிறைவில் முக்கிய முடிவுகள் எடுக்கப்படலாம். அடுத்தகட்டமாக என்னென்ன போராட்டங்கள் நடத்தப்படும்? என்பது பின்னர் அறிவிக்கப்படும்.
தங்கள் கோரிக்கைகள் ஏற்கப்படாவிட்டால் வருகிற 15-ந் தேதி முதல் பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்களிடம் இருந்து பெட்ரோல், டீசல் வாங்குவது இல்லை என்றும், விற்பனை செய்வது இல்லை என்றும் பெட்ரோல் விற்பனையாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது. இந்த போராட்டத்தில் நாடு முழுவதும் உள்ள 54 ஆயிரம் பெட்ரோல் விற்பனை நிலையங்கள் கலந்து கொள்ளும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.