
பலத்த எதிர்ப்புகளுக்கு மத்தியில் நாடு முழுவதும் மருத்துவப் படிப்புக்கான நீட் தேர்வு தொடங்கி நடைபெற்று வருகிறது.
நாடு முழுவதும் அரசு மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரிகள், நிகர்நிலை பல்கலைக்கழகங்களில் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட எம்.பி.பி.எஸ். மற்றும் பி.டி.எஸ். இடங்கள் உள்ளன.
இந்த இடங்களுக்கான மாணவர்கள் சேர்க்கை, மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் நடத்தும் நீட் எனப்படும் தேசிய தகுதி மற்றும் நுழைவுத்தேர்வு தேர்வு மூலம் நிரப்பப்படுகின்றன.
அந்தவகையில் நடப்பாண்டுக்கான நீட் தேர்வு இன்று காலை 10 மணிக்கு தொடங்கியது. நாடு முழுவதும் 104 இடங்களில் நடந்து கொண்டிருக்கும் இந்தத் தேர்வில் மொத்தம் 11 லட்சம் பேர் எழுதுகின்றனர்.
தமிழகத்தைப் பொருத்தவரை சென்னை, கோவை, மதுரை, நெல்லை, சேலம் திருச்சி, நாமக்கல், வேலூர் ஆகிய மாவட்டங்களில் நீட் தேர்வு நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இதில் 90 ஆயிரம் மாணாக்கர்கள் தேர்வில் கலந்து கொண்டுள்ளனர்.
கேமரா, வாட்ச், பிரேஸ்லெட், மோதிரம், காதுவளையம், மூக்குத்தி, செயின், நெக்லஸ், ஜிமிக்கி உள்ளிட்ட விதவிதமான தங்க ஆபரணங்கள், தண்ணீர் பாட்டில், உணவு பொருட்கள், பாக்கெட் வகை நொறுக்கு தீனி போன்றவைகளையும் தேர்வு அறைக்கு எடுத்து செல்ல அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. தேர்வு அறைக்குள் மாணவர்கள் ஷூ, சாக்ஸ் முழுக்கை சட்டை, டி–சர்ட், பெல்ட், கைக்கடிகாரம், குளிர்கண்ணாடி போன்றவை அணிய தடை விதிக்கப்பட்டுள்ளது.