
மருத்துவ கல்வியில் மாணவர் சேர்க்கைக்கான, அகில இந்திய நுழைவு தேர்வான "நீட் தேர்வு", பலத்த உளவியல் தாக்குதல் மற்றும் மனித உரிமை மீறலோடு, நேற்று நடந்து முடிந்துள்ளதாகவே, பலரும் கண்டனம் தெரிவிக்கின்றனர்.
காப்பி அடிப்பதை தடுக்கும் நோக்கத்துடன் நடத்தப்பட்ட சோதனை என்ற பெயரில், அதிகாரிகள் நடத்திய கூத்தால் பதற்றமடைந்த மாணவ மாணவிகள், அந்த அதிர்ச்சியில் இருந்து இன்னும் மீளவே இல்லை என்கின்றனர் பெற்றோர்கள்.
நீட் தேர்வெழுதும் மாணவ, மாணவிகள் பின்பற்ற வேண்டிய விதிமுறைகள், கட்டுப்பாடுகள் குறித்த தகவல் எதுவும் மாணவர்களுக்கு முன்கூட்டியே தெரியப்படுத்தவில்லை.
தேர்வு மையங்களில், முழுக்கை சட்டை அணிந்த மாணவர்களின் சட்டை, கத்தரி கோலால் துண்டிக்கப்பட்டு, அரைக்கை சட்டை ஆக்கப்பட்ட பின்னரே தேர்வு எழுத அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
பல தேர்வு மையங்களில் மாணவிகள் துப்பட்டா அணிவதற்கு கூட அனுமதி தரப்படவில்லை.
எல்லாவற்றையும் விட கேரளாவில் மாணவி ஒருவரின் உள்ளாடையில் மெட்டல் ஊக்கு இருந்த காரணத்தால் உள்ளாடையை அகற்ற வேண்டும் என்ற தேர்வு மைய அதிகாரிகளின் கெடுபிடி காட்டியுள்ளனர்.
இது உச்சக்கட்ட மனித உரிமை மீறல் என்று பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
பல இடங்களில் சோதனை என்ற பெயரில், மெட்டல் டிடெக்டர் கொண்டு சோதனை செய்தும், தலைமுடி, காது போன்றவற்றை டார்ச் அடித்தும் மாணவ, மாணவிகளை பதற்றம் அடைய வைத்துள்ளனர்.
தேர்வில் காப்பி அடித்து முறைகேடு செய்வதை தடுக்கவே இத்தகைய அடக்குமுறைகள் என விளக்கம் நீட் ஆதரவாளர்கள் விளக்கம் அளிக்கின்றனர்.
ஆனால், ராஜஸ்தானிலும், பீகாரிலும் நீட் தேர்வு வினாத்தாளை, தேர்வு நடத்தும் சிபிஎஸ்இ - ஐ சேர்ந்த ஒருவராலேயே பல லட்சங்களுக்கு, வெளியிடப்பட்டதற்கு என்ன காரணம் சொல்வார்கள்? என்று தெரியவில்லை.
அதேபோல், நீட் தேர்வில், தமிழகம் மற்றும் கேரளாவில் காட்டப்படும் கெடுபிடிகள், குஜராத், உத்திரபிரதேசம் உள்ளிட்ட வட மாநிலங்களில் காட்டப்படுவதில்லை என்றும் கூறப்படுகிறது.
அங்குள்ள மாணவர்கள் முழுக்கை சட்டையுடன் நீட் தேர்வு எழுதியதை ஊடக செய்திகளில் காண முடிகிறது என்றும் தமிழக அரசியல் தலைவர்கள் பலர் தங்கள் அறிக்கையில் சுட்டி காட்டியுள்ளனர்.
எனவே, இனியும் காலம் தாழ்த்தாமல், தமிழக மாணவர்களுக்கு நீட்டிலிருந்து விலக்கு அளிக்கும் மசோதாவுக்கு, குடியரசு தலைவரிடம் இருந்து ஒப்புதலைப் பெற, தமிழக அரசு உறுதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என பலர் வலியுறுத்தி வருகின்றனர்.
மறுபக்கம், மோடியை விமர்சித்தால் பொங்கி எழும், பொன்னார், தமிழிசை, எல்லோரையும் தேசவிரோதிகளாக பார்க்கும் எச்.ராஜா போன்ற தமிழக பாஜக தலைவர்கள், இதற்கு என்ன பதில் சொல்லப்போகிறார்கள் என்றும் மக்கள் எதிர்பார்க்கின்றனர்.