
ஓய்வு பெற்ற போக்குவரத்து ஊழியர்களுக்கான நிலுவை தொகை 500 கோடி ரூபாய் உடனே வழங்கப்படும் எனவும், மே 15 ஆம் தேதி வேலைநிறுத்தம் செய்ய இருப்பதை போக்குவரத்து தொழிலாளர்கள் மறு பரிசீலனை செய்ய வேண்டும் எனவும், அமைச்சர் விஜயபாஸ்கர் வலியுறுத்தியுள்ளார்.
13 வது ஊதிய ஒப்பந்தம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் போக்குவரத்து கழக ஊழியர்கள் தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
இந்த போராட்டத்தில் பணியில் இருப்பவர்கள் இல்லாதவர்கள் என அனைவரும் திரளாக கலந்து கொண்டு தமிழக அரசுக்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
ஆனால் தமிழக அரசு இவர்களின் கோரிக்கையை ஏற்க முன்வரவில்லை. இந்நிலையில், 13 வது ஊதிய ஒப்பந்தம் குறித்த முதல்கட்ட பேச்சுவாத்தை சென்னை பல்லவன் இல்லத்தில் நடைபெற்றது.
இந்த பேச்சுவார்த்தை தோல்வியடைந்ததையடுத்து மே 15 முதல் காலவரையற்ற வேலைநிறுத்தம் செய்யபோவதாக போக்குவரத்து தொழிற்சங்கங்கள் தெரிவித்தன.
அனைத்து தொழிலாளர் சங்கத்தினரும் இந்த வேலை நிறுத்த போராட்டத்தில் பங்கேற்க உள்ளதாகவும் தெரிவித்தனர்.
இதைதொடர்ந்து இன்று இரண்டாம் கட்ட பேச்சுவார்த்தையாக போக்குவரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் போக்குவரத்து தொழிலாளர்களிடம் ஆலோசனை நடத்தினார்.
இந்த பேச்சுவார்த்தைக்கு பின் போக்குவரத்து துறை அமைச்சர் விஜயபாஸ்கர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.
அவர் கூறியதாவது:
ஊதிய உயர்வு தொடர்பாக போக்குவரத்து ஊழியர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது.மே 15 ஆம் தேதி வேலைநிறுத்தம் செய்ய இருப்பதை போக்குவரத்து தொழிலாளர்கள் மறு பரிசீலனை செய்ய வேண்டும்.
பேச்சுவாத்தை மூலம் பேசி தீர்க்க போக்குவரத்து தொழிலாளர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது.ஒய்வு பெற்ற போக்குவரத்து ஊழியர்களுக்கான நிலுவை தொகை 500 கோடி ரூபாய் உடனே வழங்கப்படும்.
போக்குவரத்து தொழிலாளர்களுக்கு நிலுவை தொகை எதுவும் இல்லை.பழைய பேருந்துகளுக்கு பதிலாக புதிய பேருந்துகள் படிப்படியாக வாங்கப்படும்.
ஊதிய உயர்வு ஒப்பந்தம் தொடர்பாக நல்ல முடிவு எட்டப்படும்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.