
திருவள்ளூர்
திருவள்ளூரில் காதல் திருமணம் செய்துகொண்ட ஜோடி த்னது பெற்றோரிடம் இருந்து பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்று மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் சிபி சக்கரவர்த்தியிடம் மனு கொடுத்துள்ளனர்.
திருவள்ளூர் மாவட்டம், திருப்பாச்சூர் கிராமத்தைச் சேர்ந்தவர் திவ்யா (23). இவர், மாவட்டக் காவல் கண்காணிப்பாளரிடம் நேரில் சென்று மனு ஒன்றை அளித்தனர்.
அந்த மனுவில், "நானும் எங்கள் ஊரைச் சேர்ந்த முத்துவும் (27) கடந்த நான்கு ஆண்டுகளாக காதலித்து வருகிறோம். இதையறிந்த எனது பெற்றோர், எங்கும் வெளியில் செல்லவிடாமல் வீட்டுக்குள் அடைத்து வைத்தனர்.
மேலும், வேறு ஒரு நபருடன் இரகசிய திருமணம் செய்யவும் ஏற்பாடு செய்தனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, ஆள்கள் இல்லாத நேரத்தில் திங்கள்கிழமை வீட்டிலிருந்து வெளியேறி வந்துவிட்டேன்.
பின்னர், நானும், எனது காதலனும் ஊத்துக்கோட்டை சார் பதிவாளர் அலுவலகத்தில் திருமணம் செய்து கொண்டோம். தற்போது எனது கணவர் வீட்டில் இருந்து வருகிறேன்.
இந்த திருமணத்தை எனது கணவரின் குடும்பத்தினரும் ஏற்கவில்லை. எனது பெற்றோரும் மிரட்டுகின்றனர். மேலும், அடையாளம் தெரியாத நபர்களைக் கொண்டு செல்போனில் மிரட்டி வருகின்றனர்.
எனவே, எனது பெற்றோர்களிடம் இருந்து பாதுகாப்பு அளிக்க வேண்டும்" என்று அந்த மனுவில் தெரிவித்துள்ளார்.
அதனைத் தொடர்ந்து, மனுவைப் பெற்றுக்கொண்ட எஸ்.பி. சிபி சக்கரவர்த்தி உரிய பாதுகாப்பு அளிப்பதாக உறுதி அளித்தார்.