Auroville : ஆரோவில் வனப்பகுதியில் மரம் வெட்ட தடை… தேசிய பசுமை தீர்ப்பாயம் அதிரடி உத்தரவு!!

By Narendran SFirst Published Dec 10, 2021, 6:06 PM IST
Highlights

புதுச்சேரி அருகில் உள்ள ஆரோவில் வனப்பகுதியில் மரம் வெட்ட தேசிய பசுமை தீர்ப்பாயம் தடை விதித்துள்ளது.

புதுச்சேரி அருகில் உள்ள ஆரோவில் வனப்பகுதியில் மரம் வெட்ட தேசிய பசுமை தீர்ப்பாயம் தடை விதித்துள்ளது. புதுச்சேரியில் இருந்து சுமார் 10 கிலோமீட்டர் தொலைவில், விழுப்புரம் மாவட்டத்தில் அமைந்துள்ளது ஆரோவில். அரவிந்தர் ஆசிரமம் மூலம் ஆரோவில் சர்வதேச நகரம் உருவாக்கப்பட்டது. அங்கு பல்வேறு நாடுகளை சேர்ந்தவர்கள் வசித்து வருகின்றனர். இந்த நகரத்தின் அனைத்து பணிகளும் ஆரோவில் பவுண்டேஷன் மூலம் மட்டுமே மேற்கொள்ளப்படும்.  அதன் தலைவர் பதவிக்காலம் கடந்த 2021 நவம்பர் மாதத்துடன் முடிவடைந்தது. இதனையடுத்து புதிய தலைவராக தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி நியமிக்கப்பட்டார்.  மேலும்  நிர்வாகக் குழு உறுப்பினர்களாக புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் உள்ளிட்ட 8 பேர் நியமிக்கப்பட்டுள்ளனர்.  பதிய உறுப்பினர்கள் கலந்து கொண்ட முதல் நிர்வாக குழு கூட்டம் நவம்பர் 2 ஆம் தேதி நடைபெற்றது.  இதனை அடுத்து கிரவுன் என்ற திட்டத்தின் கீழ் ஆரோவில் பகுதியில் சாலை அமைப்பதற்காக மரங்கள் வெட்டும் பணி கடந்த 4 ஆம் தேதி தொடங்கியது. இந்த திட்டத்தால் 25 ஆண்டுகளாக செயல்படும் யூத் செண்டர் பாதிக்கப்படும் எனவும், இயற்கையை அழித்து இத்திட்டத்தை துவங்க கூடாது என்றும் ஒரு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இது இயற்கையை அழிக்கும் செயல் என அரசியல் தலைவர்கள் பலரும் கணடனம் தெரிவித்தனர். இதற்கிடையே ஆரோவில் நகரத்தின் மைய பகுதியில் உள்ள மரங்களை நகர வளர்ச்சிக்குழு பொக்லைன் எந்திரங்களை கொண்டு வெட்டியதை அறிந்த அப்பகுதி குடியிருப்பு வாசிகள், போராட்டத்தில் ஈடுபட்டனர்.  

ஒன்றிய அரசின் திட்டத்தை அனுமதிக்க முடியாது என்றும் அமைதியான முறையில் போராட்டம் நடத்தப்போவதாகவும் ஆரோவில் குடியிருப்பு வாசிகள் தெரிவித்தனர். எதிர்ப்பையும் மீறி மரங்களை வெட்டுவதில் ஒன்றிய அரசு அதிகாரிகள் தீவிரமாக ஈடுபட்டனர். இதுகுறித்து தமிழக அரசு தலையிட்டு தடுத்து நிறுத்த ஆரோவில் மக்கள் கோரிக்கை விடுத்திருந்தனர். இந்த நிலையில் இந்நிலையில்  புதுச்சேரி அருகில் உள்ள ஆரோவில் வனப்பகுதியில் மரம் வெட்ட தேசிய பசுமை தீர்ப்பாயம் தடை விதித்துள்ளது. முன்னதாக இந்தப் பிரச்சனை தொடர்பாக நவ்ரோஸ் மோடி என்பவர் தென்மண்டல தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தில் மனுத் தாக்கல் செய்திருந்தார். அம்மனுவில் ஆரோவில்லில் அமைந்திருக்கும் மரங்கள் அனைத்தும் கோதவர்மன் வழக்கில் உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பின் அடிப்படையில் காடு என்கிற வரையறைக்குள் வருவதால் காடுகள் பாதுகாப்புச் சட்டம் 1980ன் கீழ் மரங்களை வெட்டவும் சாலை அமைக்கவும் உரிய அனுமதியை ஆரோவில் நிர்வாகம் பெற்றிருக்க வேண்டும் என கூறப்பட்டிருந்தது.

மேலும் இத்திட்டம் குறித்த விரிவான திட்ட அறிக்கை தயார் செய்து சுற்றுச்சூழல் தாக்கம் குறித்த மதிப்பீட்டு அறிக்கை தயாரிக்க ஆரோவில் நிர்வாகத்திற்கு உத்தரவிட வேண்டும் எனவும் மனுவில் கூறப்பட்டிருந்தது. இந்த மனுவை விசாரித்த தீர்ப்பாயத்தின் நீதித்துறை உறுப்பினர் ராமகிருஷ்ணன் மற்றும்  நிபுணத்துவ உறுப்பினர் சத்யகோபால் கொண்ட அமர்வு ஆரோவில்லில் சாலை அமைக்கும் பணிகளுக்காக மரங்களை வெட்டுவதற்கு வனத்துறையின் முன் அனுமதி அவசியம் என்கிற மனுதாரரின் வாதத்தில் முகாந்திரம் இருப்பதால், இப்பிரச்சனையின் அவசரம் மற்றும் முக்கியத்துவம் கருதி  தேசிய பசுமைத் தீர்ப்பாயச் சட்டம் 2010ன் உத்தரவு 39, விதி 1 மற்றும் பிரிவு 19(4)ன் கீழ் வழங்கப்பட்டுள்ள சிறப்பு அதிகாரத்தைப் பயன்படுத்தி எதிர் மனுதாரரின் வாதத்தைக் கேட்பதற்கு முன்பாகவே மரங்களை வெட்டுவதற்கு 17.12.2021 வரை இடைக்காலத் தடை விதித்து உத்தரவிட்டனர்.  இந்த விவகாரம் தொடர்பாக ஆரோவில் பன்னாட்டு நிர்வாகம் மற்றும் சம்பந்தப்பட்ட அரசுத் துறைகள் அனைவரும் பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கை டிசமபர் 17 ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.

click me!