வீரதீரச் செயல்கள் புரிந்த தமிழக ரயில்வே ஊழியர்களுக்கு தேசிய விருது!

By SG BalanFirst Published Dec 15, 2023, 7:46 AM IST
Highlights

ரயில்வே துறையில் சிறப்பாக பணியாற்றும் ஊழியர்களுக்கு வழங்கப்படும் தேசிய விருதைப் பெற தெற்கு ரயில்வேயில் இருந்து 9 பேர் தேர்வாகியுள்ளனர்.

ரயில்வே துறையில் சிறப்பாக பணியாற்றும் ஊழியர்களுக்கு ஆண்டு தோறும் "அடி விஷிஸ்ட் ரயில் சேவா புரஸ்கார்" என்ற தேசிய விருது வழங்கப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு நாடு முழுவதும் உள்ள 100 ரயில்வே ஊழியர்கள் மற்றும் அதிகாரிகள் இந்த விருதுக்காகத் தேர்வுசெய்யப்பட்டுள்ளனர்.

தெற்கு ரயில்வேயில் இருந்து 6 ரயில்வே ஊழியர்கள் மற்றும் 3 ரயில்வே அதிகாரிகள் தேசிய விருதுக்குத் தேர்வாகியுள்ளனர். பெரும் ரயில் விபத்தைத் தடுத்த மதுரை கோட்டத்தைச் சேர்ந்த ரயில்வே ஊழியர் கே. வீரப்பெருமாளும் இந்த விருதைப் பெற இருக்கிறார். இவர் மானாமதுரை ரயில் நிலையத்தில் ரயில் பாதை பராமரிப்பு பணியாளராக பணிபுரிகிறார்.

Latest Videos

அண்மையில் ரயில் பாதை கண்காணிப்பில் ஈடுபட்டிருந்த இவர் சென்னை - தஞ்சாவூர் - ராமேஸ்வரம் எக்ஸ்பிரஸ் ரயில் வரும் தண்டவாளத்தில் விரிசல் இருப்பதைக் கண்டு உடனடியாக சிவப்பு கொடி காட்டி ரயிலை நிறுத்தினார். இதன் மூலம் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது. வீரப்பெருமாளின் இந்த சமயோஜித செயலைப் பாராட்டி அடி விஷிஸ்ட் ரயில் சேவா புரஸ்கார் விருது வழங்கப்பட உள்ளது.

DeepSouth! மனித மூளைக்கு சவால் விடும் முதல் சூப்பர் கம்ப்யூட்டர்! 2024 முதல் ஆக்‌ஷன் ஆரம்பம்!

இதேபோல சென்னையில் பணியாற்றிவரும் மதுரை கோட்டத்தை சேர்ந்த பயண சீட்டு பரிசோதகர் டி. செல்வகுமாரும் தேசிய விருது பெறவுள்ளார். போலி ஆதார் கார்டுகளை பயன்படுத்தி பயணச்சீட்டில் பெயர் மாற்றம் செய்வது, முதியோர் இட ஒதுக்கீடை தவறாக பயன்படுத்துவது போன்ற மோசடிகளைக் கண்டறிந்து அபராதம் விதித்ததற்காக இவருக்கு விருது வழங்கப்பட உள்ளது.

ரயிலை நிறுத்தி தண்டவாளத்தின் குறுக்கே நின்ற யானையைக் காப்பாற்றிய ரயில் ஓட்டுநர் ஈரோடு எம். கே. சுதீஷ்குமார், சட்டவிரோத நடவடிக்கைகளை முறியடித்த சென்னை ரயில்வே பாதுகாப்பு படை ஆய்வாளர் தேசிடி மதுசூதன் ரெட்டி, எலக்ட்ரிக் ரயில் இன்ஜின் முகப்பை பழையங்கால நீராவி என்ஜின் வடிவமைத்த ஆவடி ரயில்வே பொறியாளர் ஏ. செல்வராஜா ஆகியோரும் விருது பெறுகின்றனர்.

ரயில்வேயில் இதய நோயாளிகளுக்கு சேவை செய்த பெரம்பூர் ரயில் நிலைய மருத்துவக் கண்காணிப்பாளர் துர்கா தேவி விஜயகுமார், முதல் பாரத் கவுரவ் ரயில் இயக்கத்தில் முக்கியப் பங்காற்றிய சேலம் கோட்ட முதுநிலை வர்த்தக மேலாளர் இ. ஹரி கிருஷ்ணன், ரயில்களை அதிவேகத்தில் இயக்க தண்டவாளங்களை பலப்படுத்துவதில் முக்கியப் பணியாற்றிய சென்னை கோட்ட முதுநிலை பொறியாளர் எஸ். மயிலேறி, சிக்னல் குறைபாடுகளை தவிர்க்க உறுதுணையாக இருந்த உதவி தொலைத்தொடர்பு பொறியாளர் எஸ். மாரியப்பன் ஆகியோருக்கும் தேசிய விருது வழங்கப்படுகிறது.

மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் வரும் வெள்ளிக்கிழமை டெல்லியில் நடைபெறும் விழாவில் அடி விஷிஸ்ட் ரயில் சேவா புரஸ்கார் விருதுகளை வழங்க உள்ளார்.

நாங்க நினைச்சது நடக்கும் வரை உக்ரைனுக்கு அமைதி கிடையாது! ரஷ்ய அதிபர் புதின் திட்டவட்டம்

click me!