
Thirumavalavan vs BJP Narayanan : தமிழக சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில், தேர்தல் களம் தற்போதே சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. அந்த வகையில் கூட்டணி அமைப்பது தொடர்பாக ரகசிய பேச்சுவார்த்தை நடைபெற்று வரும் நிலையில், தவெக தலைவர் விஜய் கலந்து கொண்ட கூட்டத்தில் கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவத்தில் விஜய்க்கு ஆதரவாக பாஜக களம் இறங்கியுள்ளது. இதனை விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் விமர்சித்துள்ளார்.
விஜய்யை கையில் எடுக்க பாஜக பகீரத முயற்சிகளை எடுக்கிறது. சதிகார, சூழ்ச்சிகார அரசியல் சக்திகளிடம் சிக்கினால் அவர் இது போன்ற பல நெருக்கடிகளை சந்திக்க நேரும் என தெரிவித்திருந்தார். மேலும் பாஜக வினருக்கு உண்மையிலேயே சொரணை இருந்தால், தன்னுடைய கொள்கை எதிரி பாஜக என அறிவித்துள்ள விஜய்யிடம் வலிந்து உறவாட முயற்சி செய்ய மாட்டார்கள்" என கூறியிருந்தார்.
இதற்கு பதில் அளிக்கும் வகையில், பாஜக செய்தி தொடர்பாளர் நாராயணன் திருப்பதி வெளியிட்டுள்ள சமூகவலை தள பதிவில், தமிழ் மீனவர்கள் ஆயிரம் பேரை கொன்று குவித்ததை வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்த, இலங்கையில் இன அழிப்புக்கு சற்றும் குறையாத படுகொலைகளை அரங்கேற்றுவதற்கு துணை நின்ற காங்கிரஸ் கட்சியோடு, கொஞ்சம் கூட வெட்கம், மானம், சூடு, சொரணையில்லாமல் கூட்டணி வைத்ததோடு,
வேங்கை வயலில் குடிநீரில் மலம் கலந்த விவகாரத்தில் மௌனம் காத்ததோடு இன்னும் திமுக வோடு உறவை, கூட்டணியை தொடர்ந்து கொண்டிருக்கின்ற திருமாவளவன் அவர்களே, 41 தமிழர்கள் உயிரிழந்த கரூர் விவகாரத்தில் பொறுப்பேற்க வேண்டிய அரசின் கையாலாகாத்தனத்தை விமர்சனம் செய்வதை விஜய்க்கு ஆதரவு என்று திசை திருப்பி விடும் உங்களுக்கு சொரணை உள்ளதா என்று தான் மக்கள் கேட்கிறார்கள்! என நாராயணன் திருப்பதி கேள்வி எழுப்பியுள்ளார்.