பாஜக வெறுப்பு: ஊடகங்களுக்கு நாராயணன் திருப்பதி கண்டனம்!

By Manikanda Prabu  |  First Published Oct 25, 2023, 4:29 PM IST

வியாபாரத்திற்காக ஊடக தர்மத்தை காற்றில் பறக்க விடுவது வாடிக்கையாகி வருவதாக பாஜக மாநில துணைத்தலைவர் நாராயணன் திருப்பதி கண்டனம் தெரிவித்துள்ளார்


'ஒரு சில' ஊடகங்களும், ஒரு சில ஊடகவியலாளர்களும் மீண்டும் தங்களின் பாஜக வெறுப்பு பணியினை தொடர்வது வன்மையாக கண்டிக்கத்தக்கது என பாஜக மாநில துணைத்தலைவர் நாராயணன் திருப்பதி தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து பாஜக மாநில துணைத்தலைவர் நாராயணன் திருப்பதி தனது எக்ஸ் பக்கத்தில், “கடந்த இரு ஆண்டுகளாக தொலைக்காட்சி  ஊடக விவாதங்களில் பாஜகவினர் பங்கேற்காது தவிர்த்து வந்தோம். விவாதங்களில் பாஜகவினருக்கு உரிய நேரம் (Space) கொடுக்க ஊடகங்கள் மறுத்து வந்த நிலையில், நடு நிலையான விவாதங்கள் நடைபெற வாய்ப்பில்லை என்பதோடு, பாஜகவின் மீதான வெறுப்பை உமிழ்வதையே தொழிலாக கொண்டுள்ள 'ஒரு சில' ஊடகங்களும், ஒரு சில ஊடகவியலாளர்களும் மீண்டும் தங்களின் பாஜக வெறுப்பு பணியினை தொடர்வது வன்மையாக கண்டிக்கத்தக்கது.” என பதிவிட்டுள்ளார்.

Tap to resize

Latest Videos

மத்தியப்பிரதேச தேர்தல்: வேட்பாளர்களை மீண்டும் மாற்றிய காங்கிரஸ்!

மேலும், “ஒரு சில பங்கேற்பாளர்கள் பாஜகவினரை ஒருமையில் பேசுவதையும், பிரதமரை தரக்குறைவாக பேசுவதையும், எங்கள் மாநில தலைவரை அவதூறாக பேசுவதையும், அரசியலமைப்பு சட்டத்தின் படி பதவி வகிக்கும் ஆளுநரை அவமானப்படுத்துவதையும் இடையீட்டாளர்கள் (Moderators) கண்டிக்காமல் அமைதி காப்பதோடு அந்த நபர்களையே மீண்டும் மீண்டும் விவாதங்களுக்கு அழைத்து ஊக்குவிப்பது முறையற்ற செயல். மேலும், ஒரு விவாத தலைப்பின் கீழ் பாஜகவுக்கு எதிராக நான்கு பேரை பேச வைத்து அந்த கருத்துக்களே பெரும்பான்மையாக நிகழ்ச்சியில் பேசப்பட வேண்டும் என திட்டமிட்டு செயல்படுவது சில ஊடகங்கள் மற்றும் ஊடகவியலாளர்களின் தனிப்பட்ட வெறுப்பை, ஒரு சார்பு நிலைப்பாட்டை உணர்த்துகிறது.

கண்ணியமற்று பேசுபவர்களை சில தொலைக்காட்சி நிர்வாகங்கள் தொடர்ந்து விவாத நிகழ்ச்சிகளில் பேச வைத்து, பரபரப்புக்காக, வியாபாரத்திற்காக ஊடக தர்மத்தை காற்றில் பறக்க விடுவது வாடிக்கையாகி வருகிறது. ஏதோ, மற்றவர்களுக்கு மட்டும் தான் தரக்குறைவாக பேசத்தெரியும் என்று எண்ணிக்கொண்டிருந்தால் அது தவறு. நன்னடத்தை, கட்டுப்பாடு, ஒழுக்கம் ஆகியவற்றை கருத்தில் கொண்டு அமைதி காக்கிறார்கள் பாஜகவினர். இனியும், இது தொடரக்கூடாது. தொடர்ந்தால் அதனால் ஏற்படும் விளைவுகளுக்கு இடையீட்டாளர்களும்,  தொலைக்காட்சி நிர்வாகங்களுமே பொறுப்பு.” எனவும் நாராயணன் திருப்பதி தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

click me!