
திமுக, மதிமுக, அதிமுக என தமிழகத்தின் பிரதான திராவிடக் கட்சிகளில் நட்சத்திர பேச்சாளராக வளம் வந்த நாஞ்சில் சம்பத் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மறைவுக்கு பின்னர் டிடிவி தினகரன் ஆதரவு நிலைப்பாட்டில் இருந்தார். ஆனால் அவர் கட்சி தொடங்கியதும் கட்சியின் பெயரில் திராவிடம் என்ற வார்த்தை இல்லை எனக்கூறி தனது நிலைப்பாட்டை மாற்றிக் கொண்டார். கடந்த 6 ஆண்டுகளாக எந்த கட்சியிலும் இணையாமல் திமுகவுக்கு ஆதரவாக செயல்பட்டு வந்தார்.
ஆனால் கடந்த சில மாதங்களாக திமுக சார்பில் நடத்தப்பட்ட நிழ்ச்சிகளில் தாம் புறக்கணிக்கப்பட்டதாகவும், தன்னை திமுக அவமதித்துவிட்டதாகவும் தெரிவித்து பரபரப்பை கிளப்பினார். இதனிடையே விஜய் அழைக்கும் பட்சத்தில் தவெகவுக்கு ஆதரவாக பணியாற்ற ஆவலக இருப்பதாக தெரிவித்த நிலையில் 5ம் தேதி தமிழக வெற்றி கழகத்தில் தன்னை இணைத்துக் கொண்டார்.
திமுக, அதிமுக, மதிமுக என எந்த கட்சியாக இருந்தாலும் தனது துள்ளியமான பேச்சாற்றலால் கட்சி தலைவர்களுடன் நல்ல தொடர்பை ஏற்படுத்தி வைத்திருந்தார். இந்நிலையில் தவெகவில் அவருக்கு என்ன பொறுப்பு வழங்கப்படும் என்ற எதிர்பார்ப்பு கணிசமாக அதிகரித்தது. இந்நிலையில் நாஞ்சில் சம்பத்துக்கு முக்கிய பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.
விஜய் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழகத்தின் மூத்த அரசியல்வாதிகளுல் ஒருவர், சிறந்த பேச்சாளர், அனைவரிடத்திலும் இனிமையாக பழகக்கூடியவர். அண்ணன் திரு. நாஞ்சில் சம்பத் அவர்கள் தம்மை தமிழக வெற்றி கழகத்தில் இணைத்துக் கொண்டுள்ளார். மக்களுக்கான அரசியலில் நம்மோடு பயணிக்க இருக்கும் அவரை வரவேற்பதிில் பெருமகிழ்ச்சி அடைகிறேன்.
அண்ணன் திரு.நாஞ்சில் சம்பத் அவர்கள், கழகத்தின் பரப்புரைச் செயலாளர் பொறுப்பில் நியமிக்கப்படுகறார் என்பதை மகிழ்வுடன் தெரிவித்துக் கொள்கிறேன். இவர், பொதுச் செயலாளர் என். ஆனந்த் அவர்களுடன் இணைந்து தன்னுடையப் பணிகளை மேற்கொள்வார். கழக நிர்வாகிகளும், தோழர்களும் இவருக்கு முழு ஒத்துழைப்பு நல்கி, மக்கள் பணியாற்றிட வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.