
Jeeva Ravi Meet Sengottaiyan : தமிழ்நாட்டின் அரசியல் களத்தில் அதகளம் செய்து வரும் கட்சி என்றால் அது தமிழக வெற்றிக் கழகம் தான். அந்தக் கட்சியில் விஜய்யை தவிர்த்து பெரிய தலைகள் இல்லை என்கிற விமர்சனங்கள் இருந்தது. அதையெல்லாம் தவிடுபொடி ஆக்கும் வகையில், முக்கிய அரசியல் புள்ளிகள் தவெக நோக்கி படையெடுத்து வருகின்றனர். கடந்த வாரம் செங்கோட்டையன் தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்தார். அவர் இணைந்த கையோடு அவருக்கு முக்கிய பொறுப்பை வழங்கி இருந்தார் விஜய்.
இதையடுத்து புகழ்பெற்ற அரசியல் பேச்சாளரான நாஞ்சில் சம்பத், நேற்று விஜய் முன்னிலையில், தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்தார். இப்படி தொடர்ச்சியாக அரசியல் பிரபலங்கள் பலர் தவெக-வில் ஐக்கியமாகி வரும் நிலையில், தற்போது பிரபல சினிமா மற்றும் சின்னத்திரை நடிகரான ஜீவா ரவி, தான் விரைவில் தவெக-வில் இணைவேன் என உறுதிபட கூறி இருக்கிறார். ஈரோட்டில் செங்கோட்டையனை சந்தித்த பின்னர் அவர் இவ்வாறு கூறி இருந்தார்.
இதுகுறித்து செய்தியாளர்களிடம் ஜீவா ரவி பேசுகையில், செங்கோட்டையன் என்னுடைய குடும்பத்திற்கு நிறைய செய்திருக்கிறார். இன்றைக்கு நான் உயிரோடு இருப்பதற்கு காரணமே அவர் தான். அவருக்கு வாழ்த்து சொல்ல வந்தேன். எங்கள் திரையுலகை சேர்ந்த விஜய் அவர்களின் கட்சியில் இணைந்திருக்கிறார். நல்ல விஷயம் அது. நானும் அதில் இணையலாம். தலைவரோட ஆசிர்வாதமும், விஜய் சார் உடனான நட்பும் என்றென்றும் தொடரும். மரியாதை நிமித்தமாக தான் செங்கோட்டையன் அவர்களை சந்திக்க வந்தேன். விரைவில் அவருடன் இணைந்து நானும் பணியாற்ற தயாராக இருக்கிறேன்.
விஜய் சாரையும் எனக்கு ரொம்ப புடிக்கும். அவர் தற்போது செய்து வரும் நல்ல விஷயங்கள். அவருடைய துணிவு, மக்களுக்கு நல்லது பண்ணனும் அப்படிங்குற ஒரே ஒரு எண்ணத்தோடு இருக்கிறார். விஜய் சாருக்கு எந்த அளவு கூட்டம் வந்ததோ அதேபோல் செங்கோட்டையன் அவர்களுக்கும் தற்போது கூட்டம் வந்திருக்கிறது. அரசியல் ரொம்ப பெரிய களம். அதில் சாதாரண மனிதராக வந்து துணிச்சலோடு நிற்கிறார். நல்லது யார் செய்கிறார்களோ அவர்கள் பக்கம் நான் இருப்பேன். நமக்கு ஒரு நல்ல தலைவர் வேண்டும் என கூறி இருக்கிறார் ஜீவா ரவி.