
தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்கு செல்வது தரம் என்பதைத் தாண்டி கௌரவம் என்றொரு நிலை நம் சமூகத்தில் உள்ளது.
உயிர் மீதான பயம், மக்களின் அறியாமை ஆகியவற்றை பயன்படுத்திக்கொள்ளும் தனியார் மருத்துவமனைகளும் மருத்துவர்களும் கோடிகளில் புரள்கின்றனர். உயிரைக் காப்பாற்றுவதற்காக மருத்துவமனைக்கு வந்தால் மருத்துவர்களின் அலட்சியத்தால் பல நேரங்களில் அப்பாவி நோயாளிகளின் உயிர் பறிக்கப்படுகிறது. மக்களின் அறியாமையைப் பயன்படுத்தி உடலை உறவினர்களிடம் ஒப்படைத்துவிடுகின்றனர்.
இப்படியாக ஒரு கொடூர நிகழ்வின் மூலம் அப்பல்லோ மருத்துவமனையின் உண்மை முகம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. ஹேமநாதன் என்பவருக்கு இந்த கொடுமையை நிகழ்த்தியுள்ளது அப்பல்லோ மருத்துவமனை.
ஹேமநாதன் என்பவர் தனது தாய்க்கு மூக்கில் ரத்தம் வருவதாக சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதித்துள்ளார்.
அவரது தாயை சோதனை செய்த மருத்துவர், அவரது தாய்க்கு மூக்கில் எந்த பிரச்னையும் இல்லை என தெரிவித்துள்ளார். ஆனாலும் எம்.ஆர்.ஐ ஸ்கேன் செய்துள்ளனர். அதில் மூளையில் எந்த பிரச்னையும் இல்லை என்பது தெரியவந்துள்ளது. ஆனால் மீண்டும் அவருக்கு மூக்கில் ரத்தம் வந்ததை அடுத்து ஒரு சிகிச்சை செய்து, அதற்கு ஒன்றரை லட்சம் வசூலித்துள்ளனர். அந்த சிகிச்சைக்குப் பிறகும் மூக்கில் ரத்தம் வந்ததால் மீண்டும் ஒரு சிகிச்சை அளித்து அதற்கும் ஒன்றரை லட்சம் வசூலித்துள்ளனர்.
இந்த சிகிச்சைக்குப் பிறகு ஹேமநாதனின் தாய் சுயநினைவை இழந்தது மட்டுமல்லாமல் அவரது ஒரு கை மற்றும் கால் செயலிழந்துள்ளது. இதையடுத்து அவரது கபாலத்தை கழற்றி சிகிச்சை அளித்துள்ளனர். இதையடுத்து அளிக்கப்பட்ட சிகிச்சையில் தவறு நடந்துவிட்டதாகவும் அதை பெரிதாக்க வேண்டாம் எனவும் கூறிய மருத்துவமனை நிர்வாகம் இனிமேல் உங்கள் தாய்க்கான சிகிச்சையை இலவசமாக வழங்குகிறோம்; நீங்கள் கட்டணம் செலுத்தத் தேவையில்லை என தெரிவித்துள்ளது. இதற்கு ஹேமநாதன் ஒப்புக்கொண்டுள்ளார். அதன்பிறகு வெகுநாட்களாக மருத்துவமனையில் இருக்கக்கூடாது என்பதை காரணமாகக் காட்டி வீட்டிற்கு அனுப்பியுள்ளனர் மருத்துவர்கள்.
கபாலத்தை மீண்டும் வைக்கும் சிகிச்சைக்காக சில நாட்கள் கழித்து மறுபடியும் அப்பல்லோவிற்கு தனது தாயை அழைத்துக்கொண்டு வந்துள்ளார் ஹேமநாதன். அப்போது அந்த கபாலத்தை மீண்டும் பொருத்த முடியாததால் வேறொரு சிகிச்சை செய்ய வேண்டும் எனக்கூறி அதற்கும் லட்சக்கணக்கில் கட்டணம் வசூலிக்கப்பட்டுள்ளது. சிகிச்சைக்குப் பிறகு அவருக்கு செயற்கை சுவாசம் பொருத்தப்பட்டுள்ளது. அப்போது அங்கு பணியிலிருந்து செவிலியர் தூங்கிவிட்டதால் தனது தாய்க்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டதை கண்ட ஹேமநாதன் அதிர்ந்தார். இதுதொடர்பாக கேள்வி எழுப்பிய ஹேமநாதனை அவரது தாய் இருந்த அறைக்கு வரவிடாமல் வெளியே அனுப்பியுள்ளனர்.
கபாலத்தை பொருத்துவதற்காக வந்ததிலிருந்து 187 நாட்களுக்குப் பிறகு, ஹேமநாதன் மருத்துவமனையில் இல்லாத நேரத்தில் அவரது தாயை ஆம்புலன்சில் தூக்கிச் சென்று அனாதை எனக்கூறி அரசு மருத்துவமனையில் போட்டுள்ளனர். அதன்பிறகே இந்த விவரத்தை ஹேமநாதனிடம் தெரிவித்துள்ளனர். இதனால் மனமுடைந்து நொந்துபோய் இதுதொடர்பாக விளக்கம் கேட்ட ஹேமநாதனிடம் மருத்துவமனை நிர்வாகத்தின் முடிவு இதுதான் எனவும் எங்கு வேண்டுமானாலும் சென்று முறையிடுங்கள் என ஹேமநாதனிடம் மருத்துவமனை நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நீங்கள் எங்கு சென்றாலும் ஒன்றும் செய்ய முடியாது என மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது. அரசு அதிகாரிகள், அரசியல் தலைவர்கள், நீதிபதிகளுக்கு இலவச சிகிச்சை அளிப்பதால் நீங்கள் எங்கு சென்றாலும் எங்களை ஒன்றும் செய்ய முடியாது என திமிராக தெரிவித்துள்ளனர்.
அப்பல்லோ மருத்துவமனையின் அனைத்து அட்டூழியங்களுக்கும் ஆட்சியாளர்களும் அரசு அதிகாரிகளும் காவல் துறையும் ஒத்துழைப்பு அளிப்பதாக ஹேமநாதன் குற்றம்சாட்டுகிறார். அவரது தாய்க்கு தவறான சிகிச்சை அளித்தது முதல் தவறான சிகிச்சை அளித்தது தொடர்பாக மருத்துவர்கள் விவாதித்தது வரையிலான அனைத்து ஆதாரங்களையும் வீடியோவாக வைத்துள்ளதாக தெரிவித்துள்ளார் ஹேமநாதன்.
என்னிடம் இருக்கும் வீடியோ ஆதாரங்களைக் கேட்டு 2 கோடி ரூபாய் தருவதாக அப்பல்லோ மருத்துவமனை நிர்வாகம் சார்பில் பேரம் பேசினர் என்றும் ஆனால் என் தாய்க்கு ஏற்பட்ட நிலை இனி எந்த ஒரு தாய்க்கும் ஏற்பட்டுவிடக்கூடாது என்பதற்காக பேரத்திற்கு படியவில்லை என தெரிவிக்கிறார் ஹேமநாதன்.
அப்பல்லோ மருத்துவமனையின் அட்டூழியங்களுக்கும் சுகாதாரத்துறை அமைச்சரும் சுகாதாரத்துறை செயலாளரும் உடந்தை எனவும் ஹேமநாதன் கூறுகிறார்.
இந்த பிரச்னையில் காவல் நிலையம் முதல் நீதிமன்றம் வரை சென்று போராடிவருகிறார் ஹேமநாதன்.
புனிதமான மருத்துவ தொழிலை வைத்து கோடி கோடியாக பணம் சேர்த்துவரும் சில தனியார் மருத்துவமனைகள், சிகிச்சையாவது சரியாக அளிக்கிறார்கள் என்றால் அதுவும் இல்லை. அலட்சியமாக சிகிச்சை அளித்து உயிரைப் பறிக்கின்றனர். இப்படி தனியார் மருத்துவமனைகள் சம்பாதிக்கும் பணத்தில் ஆட்சியாளர்களுக்கும் அதிகாரிகளுக்கும் கமிஷன் செல்கிறது.
மக்கள் தனியார் மருத்துவமனைகளுக்கு செல்ல வேண்டும் என்பதற்காகவே அரசு மருத்துவமனைகள் தரம் உயர்த்தப்படாமல் இருக்கின்றன. அனைத்துவிதமான சிகிச்சைகளையும் உயர் தொழில்நுட்பத்துடன் அரசு மருத்துவமனையில் அளித்தால் மக்கள் ஏன் தனியார் மருத்துவமனையைத் தேடி செல்லப்போகிறார்கள்?
அப்பல்லோ மருத்துவமனை செய்த அனைத்து தவறுகளையும் ஆதாரங்களுடன் புகார் செய்யும் ஹேமநாதனுக்கும் அவரைப் போன்ற ஆயிரமாயிரம் ஹேமநாதன்களுக்கும் அவர்களது தாய்க்கும் என்ன நீதி கிடைக்கப்போகிறது? இனிமேல் எப்படியான ஒரு மருத்துவத்தை தனது மக்களுக்கு இந்த அரசு வழங்கப்போகிறது?
அப்பல்லோ மருத்துவமனை குறித்து வெளியான இந்த அதிர்ச்சி தகவல்கள் ஒரு புயலனாய்வு வார இருமுறை வெளியாகும் இதழில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.