உங்கள் சகாவை பார்த்தாவது மனம் மாறுங்கள் ஸ்டாலின்! கேரளா பிஎம் ஸ்ரீ திட்டத்தில் இணைந்தது குறித்து நயினார்

Published : Oct 24, 2025, 08:49 PM IST
Nainar Nagendran and MK Stalin

சுருக்கம்

கேரள அரசு பிஎம் ஸ்ரீ திட்டத்தில் இணைந்தது போன்று தமிழக அரசும் இணைய வேண்டும் என்று முதல்வர் ஸ்டாலினுக்கு தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் கோரிக்கை விடுத்துள்ளார்.

மாநிலங்களில் ஒவ்வொரு வட்டாரத்திலும் தேர்ந்தெடுக்கப்பட்ட பள்ளிகளை சிறப்பாக மேம்படுத்தி, சிறந்த கற்றல் மையங்களாக மாற்றுவதற்கான மத்திய அரசின் பிஎம் ஸ்ரீ திட்டத்தில் கேரள அரசு இணைந்துள்ளது. தமிழகத்தில் முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு பிஎம் ஸ்ரீ திட்டத்தில் இணைய தொடர்ந்து மறுப்பு தெரிவித்து வரும் நிலையில், கம்யூனிச கொள்கையை கொண்ட கேரள அரசு மத்திய அரசின் திட்டத்தில் இணைந்தது அனைவருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

பிஎம் ஸ்ரீ திட்டத்தில் இணைந்த கேரளா

இந்நிலையில், கேரளா பிஎம் ஸ்ரீ திட்டத்தில் இணைந்ததற்கு வரவேற்பு தெரிவித்துள்ள தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன், கேரளாவை பார்த்து தமிழக அரசும் இந்த திட்டத்தில் இணைய வேண்டும் என்று கூறியுள்ளார். இது தொடர்பாக நயினார் நாகேந்திரன் எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறுகையில், ''பி.எம்., ஸ்ரீ' எனப்படும், பிரதமரின் முன்னேறும் இந்தியாவுக்கான பள்ளிகள் திட்டத்தில் இணைய கேரள அரசு முடிவு செய்துள்ள செய்தி தங்கள் காதுகளுக்கு எட்டியிருக்கும் என நம்புகிறேன் முதல்வர் ஸ்டாலின் அவர்களே.

அரசுப் பள்ளிகள் தரம் உயர்த்தப்படும்

இத்திட்டத்தில் இணைந்ததற்கான காரணமாகப் பொதுவெளியில் என்ன கூறினாலும், இதன் வாயிலாக ஸ்மார்ட் வகுப்புகள், டிஜிட்டல் நூலகம், டிஜிட்டல் ஆய்வகம், விளையாட்டு உபகரணங்களுடன் கூடிய மைதானம், இன்னோவேஷன் கவுன்சில் போன்ற வசதிகளுடன் கூடிய முன்மாதிரிப் பள்ளிகளாக அரசுப் பள்ளிகள் தரம் உயர்த்தப்படும்.

கேரளாவைப் பார்த்து மனம் மாறினால் என்ன?

இதனால், கேரளாவின் பல லட்சம் ஏழைப் பிள்ளைகள் இலவசமாகத் தரமான கல்வியைப் பெற முடியும் என்பது தங்களுக்கும் தெரியும். தொட்டதற்கெல்லாம் அண்டை மாநிலங்களை உற்றுநோக்கும் நீங்கள், உங்கள் கம்யூனிஸ்ட் சகாவான பினராயி விஜயன் அவர்கள் ஆளும் கேரளாவைப் பார்த்து மனம் மாறினால் என்ன? “கல்வியில் சிறந்த தமிழ்நாடு” என்று ஆடம்பர விழாக்களை மட்டும் நடத்தினால் போதுமா? ஏழை, எளிய அரசுப் பள்ளி மாணவர்களின் நலனைக் காக்க வேண்டாமா? அவர்களை முன்னேற்ற வேண்டாமா?

மாணவர்களின் நலன் காக்க வேண்டும்

ஆட்சி முடியும் தருவாயிலாவது, தமது அரசியல் காழ்ப்புணர்ச்சியைவிட்டு, தமிழக மாணவர்களின் நலன் காக்க முன்வர வேண்டும் என்பது தான் திமுக அரசிடம் தமிழக மக்களுக்கு உள்ள கடைசி எதிர்பார்ப்பு. அதையாவது நிறைவேற்றுங்கள் முதல்வரே'' என்றார்.

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

விடாது கருப்பு..! துவண்டு கிடந்த ஓ.பி.எஸுக்கு துணிச்சல் கொடுத்த அமித் ஷா..! அதிமுவில் மீண்டும் அதிகார ஆடுபுலி ஆட்டம்..!
திமுகவினர் என்னை இழிவாக பேசினார்கள்..! விஜய் நான் உங்கள் ரசிகன் என்றார்..! நாஞ்சில் சம்பத் பேட்டி!