
கரூரில் தவெக தலைவர் விஜய் பங்கேற்ற கூட்ட நெரிசலில் குழந்தைகள், பெண்கள் உள்பட 41 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த சம்பவத்துக்கு விஜய் தான் காரணம் என ஒரு தரப்பினரும், காவல்துறை பாதுகாப்பு கொடுக்காததே காரணம் என மற்றொரு தரப்பினரும் கூறி வருகின்றனர். அதே வேளையில் விஜய்யை காண இளைய தலைமுறையினர் 8 மணி நேரம் வரை காத்துக் கிடந்த நிலையில், இன்றைய இளைஞர்களுக்கு அரசியல் புரிதல் இல்லை என பல்வேறு தரப்பினர் வேதனை தெரிவித்தனர்.
இந்நிலையில், கவிஞர் வைரமுத்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவரிடம் சினிமா மோகத்தில் மூழ்கி கிடக்கும் இன்றைய இளைஞர்களுக்கு அரசியல் புரிதல் இல்லையா? என கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு பதில் அளித்த வைரமுத்து, ''நமது நாட்டில் கல்வி கற்றவர்கள் எல்லாம் அறிவுள்ளவர்களா? படித்தவர்களுக்கு எல்லாம் வேலை கிடைத்து விட்டதா? நாட்டில் சில இளைஞர்கள் அரசியல் புரிதால் இல்லாததற்கு காரணம் அவர்களின் கல்வி முழுமையடைவில்லை என்பதே ஆகும்.
மேலும் படித்தவர்களுக்கு வேலையில்லை என்பதும் படித்தவர்கள் பலர் பொறுப்பில்லாமல் இருப்பதும் தான் இதற்கு காரணம் ஆகும். இனிமேல் வேலை செய்வதை தவிர உங்களுக்கு வேறு நேரம் இல்லை என்று மாற்றினால் ஒழிய இது மாறாது. ஒரு 10 அல்லது 15 மணி நேரம் வேலையில்லாமல் தமிழர்கள் நிற்கிறார்கள் என்றால் அதற்கு என்ன பொருள்? என நேரடியாக கேட்கிறேன். ஆகவே வேலையின்மை திண்டாட்டம் தான் பலருக்கு அரசியல் புரிதல் இல்லாததற்கு காரணம்'' என்றார்.
எல்லோருக்கும் எதற்கு இலவசம்?
தொடர்ந்து அனைவருக்கும் இலவசம் என்பதை கடுமையாக சாடிய வைரமுத்து, ''வெறும் இலவசம் மட்டுமே தமிழர்களை மேம்படுத்தி விட முடியாது. முதியவர்கள், நோயுற்றவர்கள், கையுற்றவர்களுக்கு மட்டும் தான் இலவசம் என்பது சரியாக இருக்கும். எல்லோருக்கும் எதற்கு இலவசம்? எனக்கு எதற்கு இலவசம்?
திமுக அரசை மறைமுகமாக சாடிய வைரமுத்து
கை, கால் நன்றாக இருப்பவனுக்கு எதற்கு இலவசம்? உழைக்க தெரிந்தவர்களுக்கு எதற்கு இலவசம்? என்று கேட்கக்கூடிய கேள்வி தமிழர்களின் கேள்வியாக மாறுகிறபோது அரசியல் புதிய வடிவெடுக்கும்'' என்று தெரிவித்தார். திமுக அரசு தமிழ்நாட்டில் பெண்களுக்கு மாதம் ரூ.1,000, இலவச பேருந்து பயணம் என பல்வேறு இலவசத் திட்டங்களை வழங்கி வருகிறது. இந்த நிலையில் வைரமுத்து இலவசத்துக்கு எதிராக பேசியிருப்பதன் மூலம் அவர் திமுக அரசை மறைமுகமாக சாடியிருப்பதாக பலரும் கருத்துகள் தெரிவித்து வருகின்றனர்.