
நாகப்பட்டினம்
நாகப்பட்டினத்தில் நிபா வைரஸ் தொற்று இல்லை என்று முழுமையாக உறுதி செய்யப்பட்டுள்ளது என்று மாவட்ட ஆட்சியர் சீ.சுரேஷ்குமார் தெரிவித்துள்ளார்.
நாகப்பட்டினம் மாவட்ட ஆட்சியர் சீ. சுரேஷ்குமார் நேற்று செய்திக்குறிப்பு ஒன்றை வெளியிட்டார். அதில், "நிபா வைரஸ் தொற்று, 1998 -ஆம் ஆண்டு மலேசியாவில் உள்ள கம்பங் சுங்காய் நிபா என்ற இடத்தில் கண்டறியப்பட்டது.
இந்த வைரஸ், பழந்தின்னி வெளவால்களின் உமிழ்நீர் மற்றும் கழிவுகள் மூலம் பரவக் கூடியது. பன்றிகளை கையாளும் மனிதர்களை நேரடியாக இந்த வைரஸ் தொற்று பாதிக்கும்.
இவைத் தவிர, பழந்தின்னி வெளவால் மற்றும் அணில்கள் கடித்த பழங்களை உட்கொள்வதாலும் இந்த வைரஸ் மனிதர்களை பாதிக்கும்.
காய்ச்சல், தலைவலி மற்றும் குழப்பமான மனநிலை ஆகியன நிபா வைரஸ் தொற்றின் அறிகுறிகளாகக் குறிப்பிடப்படுகிறது. இந்த வைரஸ் தொற்றுக்கு தனிப்பட்ட சிகிச்சைகள் ஏதும் கிடையாது.
காய்ச்சலை கட்டுப்படுத்துவது போன்ற துணை சிகிச்சை மூலமே இந்த வைரஸை கட்டுப்படுத்த முடியும். எனவே, அணில்கள், பழந்தின்னி வெளவ்வால்கள் கடித்த பழங்களை உட்கொள்வதை மக்கள் தவிர்க்க வேண்டும்.
பழம், காய்கறிகளை சுத்தமாக கழுவிய பின்னரே பயன்படுத்த வேண்டும். உணவு உண்ணும் முன்பாகவும், நீர் அருந்தும் முன்பாகவும் கைகளை நன்கு சுத்தம் செய்து கொள்ள வேண்டும். மேலும், கழிப்பறைப் பயன்படுத்திய பின்னர், கைகளை நன்கு சுத்தம் செய்து கொள்ள வேண்டும்.
நாகப்பட்டினம் மாவட்டத்தில் நிபா வைரஸ் தொற்று இல்லை என்பது முழுமையாக உறுதி செய்யப்பட்டுள்ளது. எனவே, நிபா வைரஸ் தொற்று குறித்து மக்கள் அச்சம் கொள்ள வேண்டாம்.
இருப்பினும், யாருக்கேனும் தலைவலி, காய்ச்சல், குழப்பமான மனநிலை போன்ற நோய் அறிகுறிகள் இருந்தால் சுய சிகிச்சை எடுத்துக் கொள்ளாமல், அருகில் உள்ள அரசு மருத்துவமனைகளை அணுக வேண்டும்" என்று அவர் அதில் தெரிவித்துள்ளார்.